ஈபிஎஸ் – அமித்ஷா சந்திபப்பு: ‘அரசியல் கணக்கு எதுவும் இல்லை’ – அண்ணாமலை.!
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் டெல்லி பயணத்தில் அரசியல் கணக்கு இல்லை என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேட்டியளித்துள்ளார்.

சென்னை : அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, இன்று டெல்லிக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடர் நடைபெற்று வரும் சூழலில் அவரது இந்த திடீர் பயணம் அரசியல் வட்டாரங்களில் பரபரப்பையும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் ஒரு வருடம் மட்டுமே உள்ள நிலையில், இந்த பயணம் முக்கியமானதாக கருதப்படுகிறது. இதையடுத்து, அவர் இன்று இரவு அமித்ஷாவை இபிஎஸ் சந்திக்க உள்ளதாக தகவல் வெளியானது. பின்னர் டெல்லி பயணம் குறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “டெல்லி பிரத்யேகமான நபரை பார்க்க வரவில்லை. டெல்லியில் திறக்கப்பட்டுள்ள எங்களது கட்சி அலுவலகத்தை பார்வையிடவே வந்துள்ளேன் என்று விளக்கமளித்திருந்தார்.
இந்நிலையில், தமிழக பாஜக சார்பில் சென்னை எழும்பூரில் இஃப்தார் நிகழ்ச்சி பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் உள்ளிட்ட தலைவர் பங்கேற்று நோன்பு திறந்தனர்.
இஃப்தார் விழா முடிந்த பின் அண்ணாமலையிடம் எடப்பாடி பழனிசாமியின் டெல்லி பயணம் குறித்த கேள்விக்கு பதிலளிக்கையில்,” உள்துறை அமைச்சர் அமித்ஷாவை யார் வேண்டுமானாலும் சந்திக்கலாம். தேசிய ஜனநாயக் கூட்டணியில் யார் வேண்டுமானாலும் இணையலாம்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் டெல்லி பயணத்தில் அரசியல் கணக்கு இல்லை. மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை யார் வேண்டுமானாலும் சந்திக்கலாம், நாங்கள் யாருக்கும் எதிரி இல்லை. அரசியல் முடிச்சுபோட்டு கேட்கும் கேள்விகளுக்கு என்னால் பதில் சொல்ல இயலாது. வருங்காலத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி இன்னும் விரிவடையும். ” என்று தெரிவித்துள்ளார்.