8 வழிச்சாலை விவகாரம்.. நிலம் கையகபடுத்த சுற்றுச் சூழல் முன்அனுமதி தேவையில்லை.. மத்திய அரசு பிரமாணப் பத்திரம் தாக்கல்..!

8 வழிச்சாலை நிலம் கையகபடுத்த சுற்றுச் சூழல் முன்அனுமதி தேவையில்லை என மத்திய அரசு பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளது.
பாரத்மாலா பரியோஜனா திட்டத்தின் கீழ் மத்திய அரசு ரூ.10,000 கோடி செலவில் 277 கி.மீ தொலைவிற்கு சேலம் – சென்னை இடையே 8 வழி சாலை அமைக்க முடிவு செய்யப்பட்டது. பின்னர், இந்த திட்டத்திற்கான நிலம் கையகப்படுத்தப்பட்டது.
இதனால், விவசாய நிலம், காடுகள், நீர் நிலைகள் பாதிக்கும் என கூறி இந்த திட்டத்திற்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இதனையடுத்து, மற்றும் நில உரிமையாளர்கள் உள்ளிட்ட பலர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் நிலம் கையகப்படுத்த தடை விதித்தது.
நிலம் கையகப்படுத்துவதற்கு தடை விதித்த சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து எட்டு வழி சாலை திட்ட செயல் இயக்குனர் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அந்த வழக்கில், மத்திய அரசு பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளது.
அதில், 2006-ஆம் ஆண்டு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு அறிவிக்கைபடி, நிலம் கையகப்படுத்த முன் அனுமதி தேவையில்லை என கூறியுள்ளது. நிலத்தின் மீது கட்டுமானம் உள்ளிட்ட பணிகளை தொடங்கும் முன்தான் சுற்றுச் சூழல் அனுமதிபெற வேண்டும் என்றும், சுற்றுச்சூழல் பாதிப்பு, மாற்றம் உள்ளிட்ட அனைத்தையும் கருத்தில் கொண்டு வல்லுனர் குழு ஆலோசனைகளின் பேரில், திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது என்றும் கூறியுள்ளது. இதுதொடர்பான வழக்கு ஆகஸ்ட் 6-ஆம் தேதி விசாரணைக்கு வரவுள்ளது குறிப்பிடத்தக்கது.