நுழைவு வரி விவகாரம்: உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்கிறார் நடிகர் விஜய்.. காரணம் இதுதான்!!

Default Image

ரோல்ஸ் ராய்ஸ் கார் நுழைவு வரி விவகாரம் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய விஜய் முடிவு.

கடந்த 2012ம் ஆண்டு பிரிட்டன் நாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட ‘ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட்’ காருக்கு, நுழைவு வரி செலுத்துவதில் இருந்து விலக்கு கேட்டு, நடிகர் விஜய் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டு அத்துடன், விஜய்க்கு ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. இந்த அபராத தொகையை முதலமைச்சர் நிவாரண நிதிக்கு அளிக்கும்படியும் தெரிவிக்கப்பட்டது.

2012-ல் தொடரப்பட்ட இந்த வழக்கை இரு தினங்களுக்கு முன்பு விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம், மனுதாரர் யார் என்பதை கேட்டு தெரிந்துகொண்டார். அதன் பின்னர் வரி என்பது கட்டாயமாக வழங்க வேண்டிய பங்களிப்பு, நன்கொடை அல்ல, நடிகர்கள் உண்மையான ஹீரோக்களாக இருக்க வேண்டும், ரீல் ஹீரோக்களாக இருக்கக் கூடாது எனவும் காட்டமாக தெரிவித்துள்ளார்.

சமூக நீதிக்கு பாடுபடுவதாக பிரதிபலிக்கும் நடிகர்கள், இதுபோன்ற வரி ஏய்ப்பு செய்வது ஏற்றுக்கொள்ள இயலாது என்றும் வரி ஏய்ப்பு என்பது தேசத்துரோகம் எனவும் நீதிபதி குறிப்பிட்டுள்ளார். இறக்குமதி செய்யப்பட்ட காருக்கான வரியை 2 வாரங்களில் செலுத்த வேண்டும் என உத்தரவிட்டு மனுவை தள்ளுபடி செய்தார்.

இந்த விவகாரம் கடந்த சில தினங்களாக சமூக வலைதளங்களில் பேசும் பொருளாக மாறியுள்ளது. விஜய் வரி விலக்கு கேட்டது தவறு என்றும் விஜய் அவரது உரிமையைத் தான் கோரியுள்ளார் எனவும் அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். சிலர் நீதிபதி மீதும் சாட்டியுள்ளனர். நுழைவு வரி ரத்து செய்யப்படும் அல்லது முடியாது என கூறாமல், தனிப்பட்ட நபர் மீது விமர்சனம் செய்வது தவறு என்றும் தெரிவிக்கின்றனர்.

இந்த நிலையில், நடிகர் விஜயின் வழக்கறிஞர் குமரேசன் கூறுகையில், வரி விலக்கு கேட்பது விஜயின் உரிமை. அதில், வரி ஏய்ப்பு என்ற வாதத்துக்கு இடமில்லை. இந்த விவகாரம் வேறுவிதமான வாதங்கள் உருவாக்கியுள்ளன. நீதிபதியின் தீர்ப்பில் சில ஆட்சேபகரமான கருத்துகள் உள்ளன. அதனால், இந்த தீர்ப்பு தொடர்பாக மேல்முறையீடு செய்யவுள்ளோம் என்று தெரிவித்தாக கூறப்படுகிறது.

இதற்காக நடிகர் விஜயின் சட்ட குழு மேல்முறையீட்டு மனுவை தயார் செய்து வருவதாகவும், இந்தியா முழுக்க நுழைவு வரிக்கு எதிராக பல்வேறு பிரபலங்கள் வைத்த கோரிக்கைகள், வழக்குகள் குறித்து உதாரணங்களுடன் மேல்முறையீடு செய்ய உள்ளதாக கூறப்படுகிறது. அதுவும், வரும் திங்கட்கிழமை மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்படலாம் என்றும் கூறுகிறார்கள்.

மேலும், நுழைவு வரிக்கு எதிராக பலர், முக்கியமாக பிரபலங்கள் பலர் வழக்கு தொடுத்துள்ளனர். அவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது இல்லை. அப்படி இருக்கும் போது தனக்கு அபராதம் விதிக்கப்பட்டது ஏன் என்றும் தன்னுடைய தனிப்பட்ட அரசியல், சமூக நிலைப்பாடுகள் குறித்து கருத்து தெரிவித்தற்கு எதிராகவும் விஜய் மேல்முறையீடு செய்ய இருக்கிறார்.

ஏற்கெனவே இறக்குமதி வரியாக 1,88,11,045 ரூபாயையும் மற்றும் பிற வரிகளும் நடிகர் விஜய் செலுத்தியுள்ளார். 2012ஆம் ஆண்டு அளிக்கப்பட்ட இடைக்கால உத்தரவின்படி, அதே ஆண்டிலேயே 20 சதவீதம் நுழைவு வரியை செலுத்தப்பட்டு அந்த வாகனத்தைப் பதிவு செய்து பயன்படுத்தி வந்தார். வரி கட்டக் கூடாது என்ற நோக்கம் இந்த வழக்கில் துளியும் இல்லை.

வரி விதிப்பில் நீதிமன்றத்தின் தீர்ப்பும் அரசின் அணுகுமுறையும் முரண்பட்டு இருந்ததால்தான் இந்த வழக்கு தொடரப்பட்டது. அப்போதே நுழைவு வரி கட்டித்தான் ஆக வேண்டும் என்ற உத்தரவு இருந்திருந்தால் எந்த ஆட்சேபனையும் இன்றி நடிகர் விஜய் கட்டியிருப்பார். செல்வாக்கைப் பயன்படுத்தி, வரி விதிப்பிலிருந்து யாரும் விலகி ஓடவோ, வெளியேறவோ முடியாது. அது விஜய்க்கு நன்றாகத் தெரியும் என வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்