பொறியியல் செமஸ்டர் தேர்வு….! புத்தகத்தை பார்த்து எழுதலாம்…! இணையத்தையும் பயன்படுத்தலாம்…! அண்ணா பல்கலைக்கழகம்
பொறியியல் செமஸ்டர் தேர்வு எழுதும் மாணவர்கள், புத்தகத்தை பார்த்தும் எழுதலாம், இணையத்தையும் பயன்படுத்தலாம் என்றும் அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிற நிலையில், உயர்கல்வி நிறுவனங்களில், கல்லூரி மாணவர்களுக்கான தேர்வு முறைகளில் மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது. தேர்வுகளை பொறுத்தவரையில் பெரும்பாலும், ஆன்லைன் முறையில் தான் நடத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில், அண்ணா பல்கலைகழகத்தை பொறுத்தவரையில், மாணவர்களுக்கு கடந்த முறை, ஆன்லைன் மூலம் தேர்வு நடைபெற்றது. அப்போது மாணவர்கள் பல சிக்கல்களை எதிர்கொண்டனர். இதனையடுத்து, வரக்கூடிய செமஸ்டர் தேர்வில் அண்ணா பல்கலைக்கழகம் ஒரு புதிய மாற்றத்தை கொண்டுவந்துள்ளது.
அதன்படி, மாணவர்கள் இணையதளத்தில் தோன்றக் கூடிய கேள்விகளுக்கு, ‘பேப்பர் – பென்’ என்ற முறையிலேயே தேர்வுகளை எழுதுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. வழக்கமாக புத்தகத்தில் இருந்து நேரடியாக கேள்விகள் கேட்கப்படும். இந்த முறை மாணவர்கள் சிந்தித்து பதிலளிக்கும் வண்ணம் தான் கேள்விகள் இடம்பெறும் என்றும், இதற்காக மாணவர்கள் புத்தகத்தை பார்த்தும் எழுதலாம், இணையத்தையும் பயன்படுத்தலாம் என்றும், ஒருவரி கேள்விகள் போல இல்லாமல், விரிவாக பதிலளிக்கும் வண்ணம் கேள்விகள் இருக்கும் என்றும் அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.