பொறியியல் செமஸ்டர் தேர்வு – இணையத்தில் பதிவு செய்யலாம்!
பொறியியல் மாணவர்களுக்கான ஆன்லைன் செமஸ்டர் தேர்வுக்கு இணையத்தளத்தில் பதிவு செய்யலாம் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு.
தமிழகத்தில் கொரோனா பாதுகாப்பு மையங்களாக செயல்படும் கல்லூரிகள் தவிர்த்து, மற்ற அனைத்து அரசு மற்றும் தனியார் பல்கலைக்கழகங்கள் / கல்லூரிகள் / தொழிற்பயிற்சி மற்றும் பயிற்சி நிலையங்கள் நிலையான கொரோனா வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி பிப்ரவரி 1-ஆம் தேதி முதல் செயல்பட அனுமதி அளித்து தமிழக அரசு உத்தரவிட்டியிருந்தது.
இதன்பின், கல்லூரிகள் பிப்ரவரி 1-ல் திறந்தாலும், ஏற்கனவே அறிவித்தபடி செமஸ்டர் தேர்வுகள் ஆன்லைனில் தான் நடைபெறும் என்று உயர்கல்வித்துறை அறிவித்திருந்தது. செய்முறை தேர்வுகளுக்காக மாணவர்கள் நலன் கருதி பிப்ரவரி 1-ல் கல்லூரிகள் திறக்கப்படுகின்றன. ஆன்லைன் தேர்வு நடக்காத நாட்களில் மாணவர்கள் கல்லூரிகளுக்கு வரவேண்டும் என தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், பொறியியல் மாணவர்களுக்கான ஆன்லைன் செமஸ்டர் தேர்வுக்கு இணையத்தளத்தில் பதிவு செய்யலாம் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. coe1.annauniv.edu.in என்ற இணையதளத்தில் இதுவரை பதிவு செய்யாதவர்கள் பதிவு செய்து கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளார். மேலும், பிப்ரவரி 19-ல் நடைபெறுவதாக இருந்த தேர்வுகளை மார்ச் மாதத்துக்கு அண்ணா பல்கலைக்கழகம் மாற்றியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.