பொறியியல் பொதுப் பிரிவு கலந்தாய்வு தொடங்கியது…!
இன்று பொது பிரிவினருக்கான கலந்தாய்வு ஆன்லைனில் தொடங்கி நடைபெற்று வருகிறது
சிபிஎஸ்சி தேர்வு முடிவுகள், நீட் தேர்வு முடிவுகள் வெளியாவதில் ஏற்பட்ட தாமதத்தின் காரணமாக பொறியியல் கலந்தாய்வு தேதிகள் மாற்றப்பட்டு கொண்டே இருந்தது. இரண்டு தேர்வு முடிவுகளும் வெளியான நிலையில், இன்று பொறியியல் கலந்தாய்வு நடைபெறும் என்று அமைச்சர் பொன்முடி தெரிவித்திருந்தார்.
அதன்படி, தமிழகத்தில் உள்ள 431 பொறியியல் கல்லூரியில் சேர சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு ஆகஸ்ட் மாதத்தில் நடைபெற்ற நிலையில், இன்று பொது பிரிவினருக்கான கலந்தாய்வு ஆன்லைனில் தொடங்கி நடைபெற்று வருகிறது.
நான்கு கட்டங்களாக நடத்தப்படும் இந்த கலந்தாய்வு ஆன்லைனில் நடைபெற்று வரும் நிலையில், தங்களுக்கான கல்லூரியை தேர்வு செய்த பின் ஒரு வாரத்திற்குள் மாணவர்கள் தங்களது கல்வி கட்டணத்தை கல்லூரியில் செலுத்தி விட வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், கலந்தாய்வுக்கான இடங்கள் ஒதுக்கப்பட்ட பின், 22 ஆம் தேதிக்குள் மாணவர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட கல்லூரிகளில் சேர வேண்டும். அவ்வாறு சேராவிட்டால் அந்த இடங்கள் காலியான இடங்களாக அறிவிக்கப்பட்டு மீண்டும் கலந்தாய்வு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.