திமுக எம்பி மீதான பணபரிமாற்ற வழக்கு.! உயநீதிமன்றம் அதிரடி உத்தரவு.!
திமுக எம்பி ஜெகத்ரட்சகன் மீதான அமலாக்கத்துறை வழக்கும் ரத்து செய்யப்படுவதாக சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு. ஏற்கனவே சிபிசிஐடி பதிந்த வழக்கும் ரத்து செய்யப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.
அரக்கோணம் மக்களவை தொகுதி எம்பி ஜெகத்ரட்சகன் மீது கடந்த 1995ஆம் ஆண்டு குரோம்பேட்டை லெதர் ஃபேக்டரி நிலத்தை அபகரித்ததாக கூறி அந்த கம்பெனி நிறுவனர் புகார் அளித்து இருந்தார்.
இந்த புகாரை அடுத்து, எம்பி ஜெகத்ரட்சகன் மீது சிபிசிஐடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதே போல, அமலாக்கத்துறையினரும் சட்டவிரோத பணபரிமாற்ற வழக்கு என பதிந்து விசாரணை தொடங்கினர்.
இந்த வழக்குகளை நீக்க கோரி உயர்நீதிமன்றத்தில் எம்பி ஜெகத்ரட்சகன் மனு அளித்து இருந்தார். இந்த மனு மீதான விசாரணையில் சில நாட்களுக்கு முன்னர் சென்னை உயர்நீதிமன்றம் சிபிசிஐடி பதிந்த வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டது.
தற்போது அதே போல அமலாக்கத்துறை வழக்கையும் ரத்து செய்ய எம்பி ஜெகத்ரட்சகன் சார்பில் உயர்நீதிமன்றத்தில் மனு அளிக்கப்பட்டது. ஏற்கனேவே அளிக்கப்பட்ட உயர்நீதிமன்ற தீர்ப்பை மேற்கோள் காட்டி அமலாக்கத்துறை பதிந்த வழக்கும் தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளது.