அமலாக்கத்துறை சோதனை அரசியல் பழிவாங்கும் நவடிக்கை – திமுக
பாஜகவுக்கு எதிரான கொள்கை ரீதியான யுத்தத்தை திமுக இன்னும் வீரியத்துடன் மேற்கொள்ளும் என்று திமுக செய்தித்தொடர்பாளர் தகவல்.
தமிழ்நாட்டில் அமைச்சர் செந்தில் பாலாஜியை தொடர்ந்து உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடிக்கு தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று சோதனையில் ஈடுபட்டுள்ளனர். சென்னை, விழுப்புரம் உள்ளிட்ட 9 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வரும் நிலையில், அவரது மகனும், திமுக எம்பியுமான கெளதம் சிகாமணி வீட்டிலும் சோதனை நடைபெறுகிறது.
இந்த நிலையில், அமைச்சர் பொன்முடி வீட்டில் நடத்தப்படும் சோதனை அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என்று திமுக செய்தித்தொடர்பாளர் தெரிவித்துள்ளார். திமுக மீது பாஜகவுக்கு கோபம், வெறுப்பு இருக்கிறது. பாஜக எதிர்ப்பு நடவடிக்கையை திமுக குறைத்துக்கொள்ள அச்சுறுத்தும் நடவடிக்கையாக சோதனை நடைபெறுகிறது. 2 வழக்குகளில் பொன்முடி குற்றமற்றவர் என்று வந்த நிலையில், தற்போது சோதனை நடைபெறுகிறது.
எதிர்கட்சிகளை வேண்டுமென்றே பயமுறுத்துவதற்காகவே அமலாக்கத்துறை ஏவிவிட்டுள்ளது மத்திய அரசு. பாஜகவுக்கு எதிரான கொள்கை ரீதியான யுத்தத்தை திமுக இன்னும் வீரியத்துடன் மேற்கொள்ளும். குஜராத்தில் 4 பாலங்கள் இடிந்துள்ளன, அங்குல ஊழலை விசாரிக்க அமலாக்கத்துறைக்கு தைரியம் இல்லை. எதிர்க்கட்சிகள் ஒன்றினையும் வேகத்தை குறைப்பதற்காக அமலாக்கத்துறையை பாஜக பயன்படுத்துகிறது. 11 ஆண்டுகளுக்கு முன்பு பதியப்பட்ட வழக்குகளில் தற்போது சோதனை நடத்தி வருகின்றனர் என திமுக செய்தித்தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.