ED ரெய்டு… “யார் என்று தெரியவில்லை” வழக்கறிஞர்களுடன் துரைமுருகன் தீவிர ஆலோசனை?
வேலூர், காட்பாடியில் திமுக எம்பி கதிர் ஆனந்த் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்று வருகிறது. சென்னையில் அமைச்சர் துரைமுருகன் வழக்கறிஞர்களுடன் ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை : வேலூர் மாவட்டம் காட்பாடியில் காந்திநகர் பகுதியில் உள்ள திமுக எம்பி கதிர் ஆனந்த் வீட்டிலும், திமுக நிர்வாகி பூஞ்சோலை சீனிவாசன் வீட்டிலும், கிங்ஸ்டன் கல்லூரி மற்றும் கதிர் ஆனந்த், பூஞ்சோலை சீனிவாசன் தொடர்புடையோர் வீடுகளிலும் அமலாக்கத்துறைனர் இன்று காலை முதல் சோதனை செய்து வருகின்றனர்.
கடந்த 2019ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் வேலூர் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட கதிர் ஆனந்த், வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க இருந்ததாக கூறி ஒரு சில இடங்களில் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த புகாரின் பெயரில் சட்டவிரோத பணப்பரிவர்த்தனை நடைபெற்றதாக அமலாகாத்துறை வழக்குப்பதிவு செய்து இன்று காலை முதல் சுமார் 2 மணிநேரத்திற்கும் மேலாக இந்த சோதனையை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் இச்சோதனை குறித்து சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் துரைமுருகன், வந்திருப்பது யார் என்றே தெரியவில்லை. உங்களுக்கு (பத்திரிகையாளர்கள்) எந்த அளவுக்கு தெரியுமோ அந்த அளவுக்கு தான் எனக்கும் தெரியும். வீட்டில் யாரும் இல்லை. வீட்டில் பணியாளர்கள் மட்டுமே தற்போது இருக்கின்றனர்.” என அவர் பேட்டியளித்தார்.
இந்நிலையில், சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அமைச்சர் துரைமுருகன் வீட்டிற்கு மூத்த வழக்கறிஞர்கள் விரைந்துள்ளதாகவும், அவர்களுடன் அமைச்சர் துரைமுருகன் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.