10 ஆண்டுகளில் ED ரெய்டின் சாதனை இதுதான்! வெளியான புதிய அறிக்கை!
கடந்த 10 ஆண்டுகளில் 193 அரசியல் பிரமுகர்கள் மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து 2 பேருக்கு மட்டுமே தண்டனை வாங்கியுள்ளது என மத்திய நிதியமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது.

டெல்லி : இந்திய அமலாக்கத்துறையானது நாட்டில் சட்டவிரோதமாக பணப்பரிவர்த்தனை நடைபெறுவதை தடுக்கும் ஒரு அரசாங்க விசாரணை அமைப்பு ஆகும். இந்த துறை மத்திய நிதித்துறையின் கட்டுப்பாட்டில் இயங்கி வருகிறது. அரசியல் பிரமுகர்கள், தொழிலதிபர்கள் மீது ஊழல் குற்றசாட்டு எழுந்தால் சிபிஐ, பொருளாதார விசாரணை பிரிவினர் அந்த குற்றம் பற்றி விசாரணை மேற்கொள்வர். அமலாக்கத்துறையானது அந்த ஊழலில் நிகழ்ந்ததாக கூறப்படும் சட்டவிரோத பணப்பரிவர்த்தனை பற்றி விசாரணை மேற்கொள்ளும்.
இந்த அமலாக்கத்துறை (ED) சோதனை என்பது பரவலாக எதிர்க்கட்சி அரசியல் தலைவர்கள் மீது அதிகளவில் மேற்கொள்ளப்படுவதாக எதிர்க்கட்சியினர், ஆளும் அரசு மீது தொடர்ந்து குற்றசாட்டை முன்வைப்பது உண்டு. இந்த அமலாக்கத்துறை விசாரணையில் இதுவரை டெல்லி முன்னாள் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், டெல்லி முன்னாள் அமைச்சர்கள் மணீஷ் சிசோடியா, சத்யேந்திர ஜெயின், தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜி என பலரும் பல்வேறு சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் கைதாகி உள்ளனர்.
இந்த அமலாக்கத்துறையால் இதுவரை வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு தண்டனை பெற்றவர்களின் விவரங்களை மத்திய நிதி அமைச்சகம் நாடாளுமன்றத்தில் வெளியிட்டுள்ளது. அதில் கடந்த 2015ஆம் ஆண்டு முதல் தற்போது வரை கடந்த 10 ஆண்டுகளில் மொத்தமாக 193 அரசியல் பிரமுகர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த 193 நபர்களில் மொத்தமாக 2 பேர் மீது மட்டுமே குற்றம் நிரூபிக்கப்பட்டு தண்டனை வழங்கப்பட்டுள்ளது என தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
கேரளாவை சேர்ந்த ராஜ்யசபா எம்பி A.A.ரஹீம் நாடாளுமன்றத்தில் அமலாக்கத்துறை பற்றி கேள்வி எழுப்பினார். அவர் குறிப்பிட்ட கேள்வியில்,
(1) கடந்த பத்து ஆண்டுகளில் எம்.பி.க்கள் மற்றும் எம்.எல்.ஏக்கள் மற்றும் உள்ளாட்சி நிர்வாக உறுப்பினர்களுக்கு எதிராக அவர்களின் கட்சியுடன், மாநில வாரியாக மற்றும் ஆண்டு வாரியாக பதிவு செய்யப்பட்ட ED வழக்குகளின் எண்ணிக்கை எவ்வளவு?
(2) ஆண்டு வாரியாக தண்டனைகள், விடுதலைகள் மற்றும் இன்னும் விசாரணையில் உள்ள வழக்குகளின் எண்ணிக்கை விவரங்கள்,
(3) சமீப ஆண்டுகளில் எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு எதிராக ED வழக்குகள் அதிகரித்துள்ளனவா, அப்படியானால், இந்தப் போக்குக்கான நியாயம் என்ன?
(3) ED விசாரணைகளின் வெளிப்படைத்தன்மை மற்றும் செயல்திறனை மேம்படுத்த அரசாங்கம் ஏதேனும் சீர்திருத்தங்களை மேற்கொண்டுள்ளதா, அப்படியானால், அதன் விவரங்கள் என்ன? என கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு மத்திய நிதி அமைச்சகத்தின் சார்பாக இணை அமைச்சர் பங்கஜ் சௌத்ரி பதில் அளித்துள்ளார். அதில்,
(1) எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் உள்ளூர் நிர்வாகிகள் மற்றும் அவர்களது கட்சிக்கு எதிராக மாநில வாரியாக பதிவு செய்யப்பட்ட ED வழக்குகளின் தரவு பராமரிக்கப்படுவதில்லை. எவ்வாறாயினும், கடந்த 10 ஆண்டுகளில் ஏற்கனவே உள்ள மற்றும் முன்னாள் எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், எம்.எல்.சி.க்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் அல்லது ஏதேனும் அரசியல் கட்சியுடன் தொடர்புடையவர்கள் மீதான வழக்குகளின் ஆண்டு வாரியான விவரங்கள் பின்வருமாறு என குறிப்பிட்டு,
- 01.04.2015 முதல் 31.03.2016 – 10
- 01.04.2016 முதல் 31.03.2017 – 14
- 01.04.2017 முதல் 31.03.2018 – 07
- 01.04.2018 முதல் 31.03.2019 – 11
- 01.04.2019 முதல் 31.03.2020 – 26
- 01.04.2020 முதல் 31.03.2021 – 27
- 01.04.2021 முதல் 31.03.2022 – 26
- 01.04.2022 முதல் 31.03.2023 – 32
- 01.04.2023 முதல் 31.03.2024 – 27
- 01.04.2024 முதல் 28.02.2025 -13
- மொத்தம் – 193
இதில், 01.04.2016 முதல் 31.03.2017 மற்றும் 01.04.2019 முதல் 31.03.2020 ஆகிய ஆண்டுகளில் மட்டுமே தலா 1 நபர் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டு தண்டனை பெறப்பட்டுள்ளது மற்ற வழக்குகளில் குற்றம் நிரூபிக்கப்படவில்லை என்ற தகவலை மட்டுமே மத்திய இணை நிதியமைச்சர் தெரிவித்துள்ளார்.
ED விசாரணைகளின் வெளிப்படைத்தன்மை மற்றும் செயல்திறனை மேம்படுத்த அரசாங்கம் ஏதேனும் சீர்திருத்தங்களை மேற்கொண்டுள்ளதா என்ற கேள்விக்கு போதிய தகவல்கள் இல்லை என பதில் அளித்துள்ளார்.
இந்திய அரசாங்கத்தின் முதன்மையான சட்ட அமலாக்க நிறுவனமான அமலாக்கத்துறை இயக்குனரகம் (ED) என்பது பணமதிப்பழிப்புத் தடுப்புச் சட்டம், 2002 (PMIA), அந்நியச் செலாவணி மேலாண்மைச் சட்டம், 1999 (FEMA) மற்றும் Fugitive EconomFugitive E1020. ED நம்பகமான ஆதாரங்களின் அடிப்படையில் வழக்குகளை விசாரணைக்கு எடுத்துக்கொள்கிறது.
அரசியல் தொடர்புகள், மதம் அல்லது பிறவற்றின் அடிப்படையில் வழக்குகளை வேறுபடுத்துவதில்லை. மேலும், ED இன் நடவடிக்கைகள் எப்போதும் நீதித்துறை மறுஆய்வுக்குத் உட்படுத்தப்படுகிறது. அமலாக்கத்துறை பல்வேறு நீதிமன்றங்களில் தீர்ப்பளிக்கும் அதிகாரம், மேல்முறையீட்டு தீர்ப்பாயம், சிறப்பு நீதிமன்றங்கள் ஆகியவற்றிற்கு பொறுப்பாகும் என எம்பியின் 4வது கேள்விக்கும் இணையமைச்சர் பங்கஜ் சௌத்ரி பதில் அளித்துள்ளார்.