‘எம்புரான்’ பட தயாரிப்பாளருக்கு சொந்தமான நிறுவனத்தில் அமலாக்கத்துறை திடீர் சோதனை.!
எம்புரான் திரைப்படத்தின் தயாரிப்பாளருக்கு சொந்தமான கோகுலம் சிட்பண்ட் நிறுவனத்தில் 6 பேர் கொண்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடியாக சோதனை நடத்தி வருகின்றனர்.

சென்னை : சென்னை கோடம்பாக்கத்தில் ‘எம்புரான்’ திரைப்பட தயாரிப்பாளருக்கு சொந்தமான கோகுலம் சிட்பண்ட் நிறுவனத்தில் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். சட்ட விரோதமாக பணப் பரிமாற்றம் நடைபெற்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் அமலாக்கத் துறை சோதனை நடைபெற்று வருகிறது.
அதன்படி, ‘எம்புரான்’ திரைப்பட தயாரிப்பாளர்களில் ஒருவரான கோகுலம் கோபாலன் என்பவருக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. சட்டவிரோத பண பரிமாற்றம்தொடர்பான குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் இந்த சோதனை நடைபெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.காலை 10 மணி முதல் தொடங்கிய சோதனை பிற்பகல் வரை நீடித்து வருகிறது
கடந்த 2017ல் கோகுலம் சிட்பண்ட்ஸ்க்கு சொந்தமான தமிழக மற்றும் புதுச்சேரி அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். அதன் அடிப்படையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே, எம்புரான் படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகள் இடம்பெற்றுள்ளதாக கூறி பல்வேறு தரப்பினரிடம் இருந்து கண்டனங்களும், எதிர்ப்புகளும் எழுந்தது. இதையடுத்து படத்தில் இருந்து 3 நிமிட காட்சிகளை படக்குழு நீக்கியது.
எம்புரான் திரைப்படம்
மலையாள சினிமாவின் முன்னணி நடிகர் மோகன்லால் நடித்து, பிருத்விராஜ் சுகுமாரன் இயக்கிய ஒரு பிரம்மாண்ட அதிரடி திரைப்படம் எம்புரான். இது 2019-இல் வெளியான ‘லூசிஃபர்’ படத்தின் இரண்டாம் பாகமாகும். இப்படத்தை ஆசீர்வாத் சினிமாஸ், ஸ்ரீ கோகுலம் மூவிஸ், மற்றும் லைகா புரொடக்ஷன்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்தன. இதில் ஸ்ரீ கோகுலம் மூவிஸ் நிறுவனத்தின் உரிமையாளர் கோகுலம் கோபாலன் முக்கிய தயாரிப்பாளர்களில் ஒருவர்.
சர்ச்சை
எம்புரான் படம் கடந்த மார்ச் 27ம் தேதி அன்று வெளியாகி, உலகளவில் ஐந்து நாட்களில் 200 கோடி ரூபாய் வசூலித்து சாதனை படைத்தது. ஆனால், படத்தில் 2002 குஜராத் கலவரத்தை நினைவூட்டும் காட்சிகள் இடம்பெற்றிருந்ததால், பாஜக, ஆர்.எஸ்.எஸ்., மற்றும் சங்க பரிவார் அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இதையடுத்து, சர்ச்சைக்குரிய 17 காட்சிகளை நீக்குவதாக மோகன்லால் அறிவித்திருந்தார்.
மேலும், படத்தில் முல்லைப் பெரியாறு அணை தொடர்பான காட்சிகள் நீக்கம் செய்யப்பட்டுள்ளது. முல்லைப் பெரியாறு காட்சிகள் நீக்கப்பட்டு தமிழகத்தில் காட்சிப்படுத்தப்படுகிறது.