அமைச்சர் ஐ.பெரியசாமியிடம் அமலாக்கத்துறை விசாரணை!
ஜாபர் சேட்டுக்கு வீடு ஒதுக்கீடு செய்த விவகாரம் தொடர்பாக அமைச்சர் ஐ.பெரியசாமியிடம் அமலாக்கத்துறை விசாரணை.
தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜரானார். முன்னாள் காவல்துறை அதிகாரி ஜாபர் சேட்டுக்கு வீடு ஒதுக்கீடு செய்த விவகாரம் தொடர்பாக அமைச்சர் ஐ.பெரியசாமியிடம் 4 மணி நேரமாக அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர். கடந்த மாதம் ஜாபர் சேட்டிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்திய நிலையில், அமைச்சர் ஐ.பெரியசாமியிடம் விசாரணை நடத்தி உள்ளது.
கடந்த 2006-ஆம் ஆண்டு தமிழக காவல் துறையின் உளவுத் துறை ஐ.ஜியாக இருந்தவர் ஜாபர் சேட். அப்போது, பல உண்மைகளை மறைத்து வீட்டு வசதி வாரிய மனை ஒதுக்கீட்டை பெற்று, பல கோடி ரூபாய் ஏமாற்றியதாக புகார் அளிக்கப்பட்டிருந்தது. இதுதொடர்பாக கடந்த 2011 ஆம் ஆண்டு லஞ்ச ஒழிப்புப் போலீசார் வழக்குப் பதிவு செய்து, சென்னை நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்தனர்.
இந்த சமயத்தில் 2007-2008-ஆம் ஆண்டு வீட்டு வசதி வாரியத்தில் ஜாபர் சேட்டுக்கு வீடு ஒதுக்கீடு செய்யப்பட்டது தொடர்பாக அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இந்த நிலையில், வீட்டு வசதி வாரியத்தில் அப்போது ஐ.பெரியசாமி அமைச்சராக இருந்ததன் அடிப்படையில் அமலாக்கத் துறையினர் தற்போது விசாரணை நடத்தி உள்ளனர்.