இம்மானுவேல் சேகரன் 67வது நினைவு தினம் : அரசியல் தலைவர்கள் மரியாதை…
இம்மானுவேல் சேகரன் 67வது நினைவு தினத்தை முன்னிட்டு அரசியல் தலைவர்கள் அவரது நினைவிடத்தில் மரியாதை செலுத்தி வருகின்றனர்.
ராமநாதபுரம் : 1924ஆம் ஆண்டு ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே செல்லூர் கிராமத்தில் பிறந்தவர் இம்மானுவேல் சேகரன். இந்திய ராணுவத்தில் பணியாற்றிய இவர், தாழ்த்தப்பட்ட மக்களுக்காக பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டுள்ளார். கடந்த 1957, செப்டம்பர் 11இல் படுகொலை செய்யப்பட்டார். அவர் இறந்த நாளான செப்டம்பர் 11ஆம் தேதியன்று ஆண்டுதோறும் இம்மானுவேல் சேகரன் நினைவேந்தல் நிகழ்வு அனுசரிக்கப்படுகிறது.
பரமக்குடியில் அமைக்கப்பட்டுள்ள இம்மானுவேல் சேகரன் நினைவிடத்திற்கு இன்று அரசியல் தலைவர்கள் நேரில் வந்து மரியாதை செலுத்துகின்றனர். இம்மானுவேல் சேகரனார் நினைவுதினம் அரசு விழாவாக அனுசரிக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்ததை தொடர்ந்து, இன்று அரசு சார்பில் இம்மானுவேல் சேகரனாருக்கு மரியாதை செலுத்தப்பட்டது.
அரசு சார்பில் அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், ஐ.பெரியசாமி, தங்கம் தென்னரசு, மூர்த்தி, ராஜ கண்ணப்பன், பெரிய கருப்பன் ஆகியோர் பரமக்குடியில் உள்ள இம்மானுவேல் சேகரன் நினைவிடத்திற்கு நேரில் வந்து மலர்த் தூவி மரியாதை செலுத்தினர்.
அதேபோல காங்கிரஸ் சார்பில் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை உள்ளிட்ட காங்கிரஸ் கட்சி பிரமுகர்கள் இம்மானுவேல் சேகரன் நினைவிடத்திற்கு நேரில் வந்து மலர் தூவி மரியாதை செலுத்தினர். பின்னர் செய்தியாளர்களிடம் செல்வப்பெருந்தகை, ” ராமநாதபுரம் பகுதி காவல்துறையினர் உரிய பாதுகாப்பு வழங்கவில்லை. அவர்கள் அலட்சியமாக நடந்து கொண்டனர்.”என குற்றம் சாட்டினார்.
அதிமுக சார்பில் ஆர்.பி.உதயகுமார், அதிமுக உரிமை மீட்பு குழு சார்பில் ஓ.பன்னீர்செல்வம், பாஜக தலைவர்கள், நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் ஆகியோர் அடுத்தடுத்து மரியாதை செலுத்த உள்ளனர் என தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.
இம்மானுவேல் சேகரன் நினைவு நாள் , பசும்பொன் முத்துராமலிங்கதேவரின் குருபூஜை (அக்டோபர் 30) ஆகிய நிகழ்வுகளை அடுத்து ராமநாதபுரம் முழுவதும் சுமார் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.