அமைச்சருடனான பேச்சுவார்தையில் சுமூக முடிவு.! ஆசிரியர்கள் போராட்டம் வாபஸ்.! 

Minister Anbil Mahesh - Middle school Teachers

தமிழ்நாடு பகுதி நேர ஆசிரியர்கள், இடைநிலை ஆசிரியர்கள், ஆசிரியர் தகுதி தேர்வு தேர்ச்சி பெற்றவர்கள் ஆகியோர் கடந்த வாரம் சென்னையில் போராட்டம் நடத்தினர். பணி நியமனம், சம வேலை சம ஊதியம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து அவர்கள் தங்கள் உண்ணாவிரத போராட்டத்தை நடத்தி வந்தனர். பலகட்ட பேச்சுவார்த்தைகளுக்கு பிறகு அரசுக்கும் – ஆசிரியர்களுக்கும் உடன்பாடு ஏற்பட்டு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.

இதனைத் தொடர்ந்து தொடக்கக்கல்வி ஆசிரியர்கள், தங்கள் 30 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து இன்று (அக்டோபர் 13 ) சென்னை ராஜரத்தினம் அரங்கில் போராட்டம் நடத்த உள்ளதாக தொடக்கக்கல்வி ஆசிரியர் இயக்க கூட்டுறவு குழு முன்னதாக அறிவித்து இருந்தது.

இதனை அடுத்து பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடைபெற்றும் அதில் தோல்வி அடைந்த காரணத்தால், இன்று ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று எதிர்பார்த்த நிலையில், நேற்று பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ், ஆசிரியர்களை பேச்சுவார்த்தைக்கு அழைத்து இருந்தார்.

நேற்று அமைச்சர் செய்தியாளர்களிடம் பேசுகையில், காலை முதல் ஆசிரியர்களின் வருகைக்காக காத்திருப்பதாக தெரிவித்து இருந்தார். நேற்று மாலை அமைச்சர் அன்பில் மகேஷ், பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் ஆகியோர் உடன்  தொடக்க கல்வி ஆசிரியர்கள், சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள அலுவலகத்தில் ஆலோசனையில் ஈடுபட்டனர். அந்த ஆலோசனையில் 11 கோரிக்கைகள் ஏற்கப்பட்டதாக தெரிகிறது. இதனை அடுத்து அவர்களின் இன்றைய போராட்டம் வாபஸ் பெறப்பட்டதாக அறிவித்தனர்.

அதில் முக்கியமாக, தமிழகத்தில் தொடக்க கல்வி ஆசிரியர்களுக்கு புதிய டிஐ (DI) பணிகள் உருவாக்கி தரப்படும் என்றும், பள்ளி மேலாண்மை குழு கூட்டம் இணை மாதந்தோறும் நடைபெறாமல், மூன்று மாதத்திற்கு ஒருமுறை நடைபெறும் என்றும், தொடக்க கல்வி ஆசிரியர்களை ஆசிரியர் பயிற்சியாளர்களாக நியமிக்க மாட்டோம் என்றும், குறிப்பாக வருகை பதிவேடு விவகாரத்தில் இஐஎம்எஸ் (EIMS) முறையை விடுத்து, வழக்கமான மாணவர், ஆசிரியர் வருகை பதிவேடு முறை நடைமுறைப்படுத்தப்படும் என்றும் உறுதி அளித்ததை தொடர்ந்து இந்த போராட்டம் வாபஸ் பெறப்படுவதாக தொடக்க கல்வி ஆசிரியர் சங்கத்தினர் தெரிவித்தனர்.

மேலும், இன்று போராட்டம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டு இருந்த இடமான சென்னை ராஜரத்தினம் மைதானத்தில் இன்று ஆலோசனை விளக்க கூட்டம் நடைபெறும் என அறிவித்தனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்