எந்த தடங்கலும் இல்லாமல் மின்சாரம் விநியோகம் செய்யப்படும்..! அமைச்சர் செந்தில் பாலாஜி
கோடை காலத்தில் எந்த தடங்கலும் இல்லாமல் மின்சாரம் விநியோகம் செய்யப்படும் என அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியுள்ளார்.
கரூர் மாநகர பேருந்து நிலைய ரவுண்டானா அருகில், கோடை வெயிலில் பொதுமக்களின் தாகம் தீர்க்கும் வகையில், நீர்மோர் பந்தலை அமைச்சர் செந்தில் பாலாஜி துவக்கி வைத்தார். இதையடுத்து செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், கோடை காலத்தில், சீராக, எந்த தடங்கலும் இல்லாமல், மின்சாரம் விநியோகம் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று கூறினார்.
மேலும், கோடை காலத்தில் எவ்வளவு மின்சாரம் தேவைப்படும் என்பதை கணக்கிட்டு அடுத்த மூன்று மாதங்களுக்கு தேவையான கூடுதல் மின்சாரதிற்கு அதற்கான டெண்டர் விடப்பட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் இந்த கோடை காலத்திற்கு மட்டும் ரூ.1312 கோடி மின்வாரியத்திற்கு சேமிப்பாகியுள்ளது ஆனால் வெளிச்சந்தையில் இருந்து மின்சாரத்தை வாங்கி இருந்தால் ரூ.1312 கோடிக்கும் கூடுதலாக வந்திருக்கும் எனக் கூறினார்.
அதனால், எந்த விதமான பயமோ அச்சமோ தேவையில்லை, தேவைக்கும் அதிகமான மின்சாரம் நம்மிடம் இருப்பு உள்ளது. தேவை மேலும் அதிகரித்தாலும் அதை சமாளிக்க மின்சார வாரியம் தயார் என்றும் மின் வாரியம் சார்ந்த புகார்கள் ஏதேனும் இருந்தால் 9498794987 என்ற எண்ணிற்கு பொதுமக்கள் தொடர்புகொண்டால் உடனடியாக தீர்வு காணப்படும் என்று மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியுள்ளார்.