சென்னை மக்களின் கவனத்திற்கு: தாம்பரம் – கடற்கரை இடையே நாளை மின்சார ரயில் ரத்து… 40 பேருந்துகள் இயக்கம்!
சென்னையில் தாம்பரம் - கடற்கரை இடையே நாளை காலை 7 முதல் மாலை 4 வரை மின்சார ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.
சென்னை: நாளை (டிச.05) தாம்பரம் ரயில் நிலையத்தில் பயணிகளுக்கான புதிய நடை மேம்பாலம் அமைக்கும் பணி நடைபெறுவதால், காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரை, சென்னை கடற்கரையிலிருந்து தாம்பரம் செல்லும் ரயில்கள் பல்லாவரம் வரையும், காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரை, செங்கல்பட்டில் இருந்து கடற்கரை செல்லும் ரயில்கள் கூடுவாஞ்சேரி வரையும் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இந்நிலையில், ரயில் வழித்தடத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதால், பயணிகள் நலன் கருதி நாளை மட்டும் கூடுதலாக 40 பேருந்துகள் இயக்கப்படும் என்று மாநகரப் போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக, மாநகரப் போக்குவரத்துக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, “நாளை ஏற்கனவே இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக பல்லாவரம் பேருந்து நிலையத்திலிருந்து செங்கல்பட்டுக்கு 10 பேருந்துகளையும், பல்லாவரம் பேருந்து நிலையத்திலிருந்து கூடுவாஞ்சேரிக்கு 10 பேருந்துகளையும், தாம்பரம் பேருந்து நிலையத்திலிருந்து தி.நகர் மற்றும் பிராட்வேக்கு கூடுதலாக 20 பேருந்துகள் என மொத்தம் 40 பேருந்துகள் இயக்கப்படவுள்ளது.
மேற்குறிப்பிட்டபடி, முக்கிய பேருந்து நிலையங்களில் இதற்காக அலுவலர்களை நியமித்து இப்பேருந்துகள் இயக்கத்தினை கண்காணிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என தெரிவித்துக் கொள்ளப்படுகிறது” என்று மாநகரப் போக்குவரத்துக் கழகம் தகவல் தெரிவித்துள்ளது.