நாங்கள் கேட்டது.. அவர்கள் கொடுத்தது.? விசிக, மதிமுக சின்னங்கள்…
Election2024 : மக்களவை தேர்தலில் விசிகவுக்கு பானை சின்னமும், மதிமுக கட்சிக்கு தீப்பெட்டி சின்னமும் ஒதுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகள் மற்றும் புதுச்சேரி தொகுதி என மொத்தம் 40 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வரும் ஏப்ரல் 19ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. திமுக தலைமையிலான கூட்டணியில் திமுக, காங்கிரஸ், விசிக, மதிமுக, கம்யூனிஸ்ட் கட்சிகள் , இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி ஆகிய கட்சிகள் போட்டியிடுகின்றன.
இதில் , விசிக மற்றும் மதிமுக ஆகிய கட்சிகள் தங்கள் கட்சிகளின் பிரதான தேர்தல் சின்னங்களை கோரி தேர்தல் ஆணையம், நீதிமன்றம் வரை சென்று போராடின. மதிமுக கட்சி திமுக கூட்டணியில் ஒரே ஒரு தொகுதியில் நிற்பதால் மதிமுக சின்னமான பம்பரம் சின்னத்தை ஒதுக்க முடியாது என தேர்தல் ஆணையம் மறுத்துவிட்டது.
திருமாவளவனின் விசிக கட்சி கடந்த சில ஆண்டுகளாக முறையாக வரவு செலவு கணக்கை தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்யவில்லை என கூறி பானை சின்னத்தை தேர்தல் ஆணையம் முதலில் மறுத்தது. பின்னர், மற்ற கட்சிகள் பானை சின்னத்தை கோராததாலும், விசிக ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கட்சி என்பதாலும் முன்னுரிமை அடிப்படையில் விழுப்புரம், சிதம்பரம் என இரு தொகுதிகளில் போட்டியிடும் விசிக கட்சிக்கு பானை சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியது.
அதே போல, மதிமுக தங்கள் கட்சிக்கு பம்பரம் சின்னம் ஒதுக்கவில்லை என்றால், தீப்பெட்டி அல்லது சிலிண்டர் ஆகிய சின்னத்தில் ஏதேனும் ஒன்றை கொடுக்க கேட்டு இருந்தனர். இதில் தீப்பெட்டி சின்னத்தை மதிமுக கட்சிக்கு தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளது.