#ElectionBreaking: மதிமுகவுக்கு 6 தொகுதிகள் ஒதுக்கீடு., உதய சூரியன் சின்னத்தில் போட்டி., ஒப்பந்தம் கையெழுத்தானது.!
திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 6 தொகுதிகள் ஒதுக்கீடு செய்து, அதற்கான உடன்பாடு ஒப்பந்தம் கையெழுத்தானது.
திமுகவுடன் மதிமுக தொகுதி பங்கீடு குறித்து இரண்டு கட்டம் பேச்சுவார்த்தை நடத்தியும், அதற்கான முடிவு எட்டப்படவில்லை. தொடர்ந்து இழுபறியில் இருந்து வந்த நிலையில், இன்று மீண்டும் திமுக மதிமுகவை பேச்சுவார்த்தைக்கு அழைத்திருந்தது. அதன்படி, அண்ணா அறிவாலயத்தில் சற்று முன் திமுக – மதிமுக இடையே தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது.
இதனிடையே, ஆரம்பத்தில் மதிமுக தரப்பில் 12 தொகுதிகள் கேட்கப்பட்ட நிலையில், திமுக நான்கு தொகுதிகள் தான் ஒதுக்க முடியும் என்று கூறியதால், இரு தரப்பிலும் சுலபமான முடிவு எட்டப்படவில்லை. ஆகையால், இன்று மீண்டும் நடைபெற்ற மூன்றாம் கட்ட பேச்சுவார்த்தையில் திமுக சற்று முன்னேறி, மதிமுகவுக்கு 6 தொகுதிகளை ஒதுக்குவதாக தெரிவித்துள்ளது.
மேலும் திமுக – மதிமுக இடையே தொகுதி பங்கீடு குறித்த ஒப்பந்தம் சற்று நேரத்தில் கையெழுத்தாகும் என்று தகவல் கூறப்பட்ட நிலையில், அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் முக ஸ்டாலின் முன்னிலையில் மதிமுகாவுக்கு 6 தொகுதிகளை ஒதுக்கீடு செய்ததற்க்கான ஒப்பந்தம் கையெழுத்தானது. மேலும் வரும் சட்டமன்ற தேர்தலில் இந்த 6 தொகுதிகளில் மதிமுக உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட சம்மதம் தெரிவித்து, ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.
கடந்த 2019 மக்களவை தேர்தலில் ஈரோடு தொகுதியில் மதிமுகவின் கணேசமூர்த்தி உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்தார். தனி சின்னத்தில் போட்டியிட்டால் 4 தொகுதிகள் மட்டுமே ஒதுக்கப்படுவதாக திமுக தெரிவித்தாக கூறப்படுகிறது. இதனால் 6 தொகுதிகளை பெற்றுகொண்டு உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறோம் என மதிமுக சம்மதம் தெரிவித்துள்ளது.
இந்த ஒப்பந்தம் கையெழுத்தில் மதிமுக பொதுச்செயலாளர் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர். மேலும், மதிமுக தேர்தலில் போட்டியிட விரும்பும் தொகுதிகளின் பட்டியலையும் திமுகவுடம் கொடுத்துள்ளது. அதன்படி, மதுராந்தகம், நெய்வேலி, திருச்சி, வாசுதேவநல்லூர், கோவில்பட்டி, சாத்தூர், திருப்பூர் தெற்கு உள்ளிட்ட தொகுதிகளின் பட்டியலை மதிமுக வழங்கியுள்ளது என்பது குறிப்பிடப்படுகிறது.
இதனிடையே, திமுக கூட்டணியில் இதுவரை விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 6, இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 6, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிக்கு 3, மனிதநேய மக்கள் கட்சிக்கு 2, மற்றும் தற்போது மதிமுகவுக்கு 6 என மொத்தம் 23 தொகுதிகளை திமுக ஒதுக்கீடு செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.