சூறாவளி பிரச்சாரத்தில் ஓர் நடைபயணம்… தூத்துக்குடி மார்க்கெட்டில் முதல்வர்.!
Election2024 : நடைப்பயிற்சி முடித்துக்கொண்டு தூத்துக்குடி காய்கறி சந்தையில் திமுகவுக்கு வாக்கு சேகரித்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.
தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் ஒரே கட்டமாக வரும் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற உள்ளது. இன்னும் கிட்டத்தட்ட 25 நாட்களே உள்ள நிலையில் நாளை (மார்ச் 27ஆம்) வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாளாகும். தேர்தல் நெருங்கும் வேளை என்பதால் பிரச்சார வேலைகளில் அரசியல் தலைவர்கள் வெகு தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
திமுக தலைவரும் தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் தமிழகம் முழுக்க சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்காக வாக்கு சேகரித்து வருகிறார்.
நேற்று, திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியில் நடைபெற்ற பிரச்சாரம் கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார். அங்கு கன்னியாகுமரி மற்றும் திருநெல்வேலி காங்கிரஸ் வேட்பாளர்களை அறிமுகப்படுத்தி பிரச்சாரம் மேற்கொண்டார். இதனை தொடர்ந்து நேற்று இரவு தூத்துக்குடி வந்துள்ளார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.
தூத்துக்குடியில் சிந்தலக்கரையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கும் பொது கூட்டம் நடக்கிறது. அதில் தூத்துக்குடி திமுக வேட்பாளர் கனிமொழி மற்றும் ராமநாதபுரம் திமுக கூட்டணி வேட்பாளர் நவாஸ் கே.கனி ஆகியோரை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார்.
நேற்று இரவு தூத்துக்குடியில் தங்கி இருந்த முதல்வர், இன்று அதிகாலை தூத்துக்குடி ராஜாஜி பூங்காவில் நடைபயிற்சி மேற்கொண்டார். அதன் பின்னர் தூத்துக்குடி நகர காய்கறி சந்தையில் திமுக வேட்பாளர் கனிமொழிக்கு ஆதரவாக அங்கள்ள வியாபாரிகள் மக்களிடம் வாக்கு சேகரித்தார்.