தேர்தல் விதிகள் திருத்தம் : பாஜக கூட்டணியில் இருக்கும் கட்சிகளும் எதிர்க்க வேண்டும்- மு.க.ஸ்டாலின் கண்டனம்!
தேர்தல் விதிகள் திருத்தப்பட்டதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் கண்டனம் தெரிவித்துள்ளார்.
சென்னை : தேர்தலின் போது வாக்குச்சாவடிகளில் உள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவாகும் காட்சிகளை இனி பொதுமக்கள் பார்வையிட முடியாதபடி, தேர்தல் விதிகளை மாற்ற அதற்கான நடவடிக்கையை மேற்கொண்டு மத்திய அரசு தேர்தல் விதிகளின் பிரிவு 93 (2) (a)வின் கீழ் தேர்தல் விதிமுறைகளில் திருத்தம் செய்துள்ளது.
இந்நிலையில், இதற்கு அரசியல் தலைவர்கள் பலரும் கண்டனங்களை தெரிவித்து வருகிறார்கள். குறிப்பாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகை, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்டோர் தங்களுடைய கண்டனங்களை தெரிவித்திருந்தார்கள்.
அவர்களை தொடர்ந்து தற்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் கண்டனத்தை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது “வெளிப்படைத்தன்மை கொண்ட தேர்தல் முறையை ஒழிக்கும் வகையில் தேர்தல் நடத்தை விதிகள் 93 (2) (அ)-இல் செய்யப்பட்டுள்ள ஆபத்தான திருத்தத்தால் மக்களாட்சி தனது மிகப்பெரும் அச்சுறுத்தலை ஒன்றிய பா.ஜ.க. அரசிடம் இருந்து எதிர்நோக்கியுள்ளது.
குறிப்பிட்ட வாக்குச்சாவடியின் சி.சி.டி.வி. காட்சிப் பதிவுகளை வழங்குமாறு பஞ்சாப் – மற்றும் ஹரியானா உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை அடுத்து, சி.சி.டி.வி. பதிவுகள் மற்றும் தேர்தல் தொடர்பான பிற ஆவணங்கள் பொது ஆய்வுக்கு உட்படுத்தப்படுவதைத் தடுக்கும் வகையில் ஒன்றிய அரசானது இந்தச் சட்டத் திருத்தத்தைக் கொண்டு வந்துள்ளது.
இதன் மூலம், அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படையான கூறுகளுள் ஒன்றினை அழித்துள்ளது. ஒன்றிய பா.ஜ.க. அரசின் பயம் ஹரியானா மாநிலத் தேர்தலோடு நிற்கவில்லை, அண்மையில் மகாராஷ்டிர மாநிலத்தில் அவர்கள் தேர்தலின் புனிதத்தன்மையைக் கெடுத்துப் பெற்ற பொய்யான வெற்றி தீவிரமான எதிர்ப்புக்கு ஆளாகியிருப்பதால் அடைந்துள்ள பதற்றத்தின் எதிரொலிப்பாகவே இது அமைந்துள்ளது.
தனது அமைப்பின் சுதந்திரத்துக்காகப் போராடுவதற்குப் பதிலாகத் தேர்தல் ஆணையமும் பிரதமர் மோடி அவர்கள் தலைமையிலான அரசின் அழுத்தத்துக்கு மனமுவந்து பணிந்திருப்பதும், நேர்மையான – நியாயமான தேர்தல் எனும் தனது குழந்தையையே அது உருக்குலைத்திருப்பதும் அதிர்ச்சியளிக்கிறது. நம் நாட்டில் சுதந்திரமான – நியாயமான தேர்தல்கள் நடைபெறுவதன் மீது தொடுக்கப்பட்டுள்ள மக்களாட்சிக்கு விரோதமான இந்தத் தாக்குதலை எதிர்க்க பா.ஜ.க. தலைமையிலான ஒன்றிய அரசில் அங்கம் வகிக்கும் கட்சிகள் உட்பட அனைத்து அரசியல் கட்சிகளும் முன்வர வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன்” என கூறியுள்ளார்.
Democracy is facing its gravest threat under the BJP-led Union Government with the reckless amendment of Section 93(2)(a) of the Conduct of Election Rules, to kill the transparency in election.
Consequent on the direction of the Punjab and Haryana High Court to furnish the CCTV… https://t.co/vkAaY2ynr3
— M.K.Stalin (@mkstalin) December 23, 2024