நாளை மாலை 6 மணி முதல் வாக்குப்பதிவு நாள் வரை… தேர்தல் விதிமுறைகள் வெளியீடு!
Election2024: நாளை மாலையுடன் தேர்தல் பிரச்சாரம் ஓய்வு பெறும் நிலையில், பின்பற்றவேண்டிய தேர்தல் விதிமுறைகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்.
நாடாளுமன்ற மக்களவை தேர்தல் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வரும் 19 தேதி நடைபெற உள்ள நிலையில், கடந்த சில வாரங்களாக அனல் பறக்க நடந்து வரும் தேர்தல் பிரச்சாரம் நாளை மாலை 6 மணியுடன் நிறைவு பெறுகிறது. இந்த நிலையில் நாளை மாலை 6 மணி முதல் ஏப்ரல் 19 வாக்குப்பதிவு நாள் வரை உள்ள தேர்தல் விதிமுறைகளை தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு வெளியிட்டார்.
அதன்படி தமிழகத்தில் மக்களவை தேர்தல் மற்றும் விளவங்கோடு இடைத்தேர்தளுக்கான வாக்குப்பதிவு வரும் 19ம் தேதி காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறும். நாளை மாலை 6 மணிக்கு மேல் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ளக் கூடாது. அதாவது, ஊடகங்கள், பேஸ்புக், வாட்ஸ் ஆப், எக்ஸ் வலைதளம் போன்ற சமூக வலைத்தளங்கள் உள்ளிட்ட எந்த வகையிலும் பிரச்சாரம் செய்யக் கூடாது.
அதேபோல் நாளை மாலை 6 மணிக்கு பிரச்சாரம் முடிந்தவுடன் தொகுதி சாராத வெளியூர் நபர்கள் அந்த தொகுதியை விட்டு வெளியேற வேண்டும். ஹோட்டல்கள், வீடுகளில் வெளியூர் நபர்கள் இல்லை என்று நிர்வாகம் உறுதி செய்யவேண்டும். தேர்தல் தொடர்பான கூட்டம், ஊர்வலம் நடத்தவோ, அதில் வேட்பாளர் பங்கேற்கவோ கூடாது.
இசை மற்றும் பொழுபோக்கு நிகழ்ச்சிகள், திரையரங்குகள் வாயிலாக பரப்புரை செய்யக்கூடாது. இந்த விதிமுறைகளை மீறுவோருக்கு மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி 2 ஆண்டுகால சிறை தண்டனை விதிக்கப்படும் எனவும் தேர்தல் ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த விதிமுறைகளை இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அறிவிப்பின்படி, மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.