இரட்டை இலை அதிமுகவுக்கே..! ஓபிஎஸ் கோரிக்கை நிராகரிப்பு
Two Leaves Symbol: ஓபிஎஸ் கோரிக்கை நிராகரிப்பு.. இரட்டை இலை சின்னம் அதிமுகவுக்கு ஒதுக்கீடு
இரட்டை இலை சின்னத்தை முடக்க வேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை விடுத்திருந்த நிலையில் அதை நிராகரித்துள்ள இந்திய தேர்தல் ஆணையம் அதிமுகவுக்கு இரட்டை இலை சின்னத்தை ஒதுக்கீடு செய்து உத்தரவு பிறப்பித்துள்ளது.
மக்களவைத் தேர்தல் நெருங்கியுள்ள நிலையில் அதிமுக சின்னம், பெயர், லெட்டர்பேடு உள்ளிட்டவற்றைப் பயன்படுத்த முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
இதனால், அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தை முடக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்தில் ஓ.பன்னீர் செல்வம் மனுத் தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், தனது தலைமையிலான அணிக்கு இரட்டை இலை சின்னத்தை ஒதுக்காவிட்டால், சின்னத்தை முடக்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்திருந்தார்.
இந்த நிலையில், மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் மாநில கட்சிகளுக்கான சின்னங்களை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதில், அதிமுகவிற்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் ஓ.பன்னீர்செல்வத்தின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளதோடு, மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் இரட்டை இலையை பயன்படுத்த தடை இல்லை என்பதும் தெளிவாகியுள்ளது.