இன்று முதல் தேர்தல் பிரச்சாரம்.. தேதி அறிவித்ததும் கூட்டணி! இபிஎஸ் அதிரடி அறிவிப்பு!
மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 76-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படும் நிலையில், அதிமுக தலைமை அலுவலகம், நினைவிடம் உள்ளிட்ட இடங்களில் தலைவர்கள் மரியாதை செலுத்தி வருகின்றனர். அந்தவகையில், ஜெயலலிதாவின் பிறந்த தினத்தை முன்னிட்டு, சென்னை பசுமை வழி சாலையில் உள்ள இல்லத்தில் அவரது உருவப்படத்திற்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
இதன்பின் செய்தியாளர் சந்திப்பின்போது எடப்பாடி பழனிசாமி, நாடாளுமன்ற மக்களவை தேர்தல் கூட்டணி, பிரச்சாரம் உள்ளிட்டவை தொடர்பாக பேசினார். அவர் கூறியதாவது, மக்களவை தேர்தல் பிரச்சாரத்தை அதிமுக இன்று முதல் தொடங்கியுள்ளது. தமிழர் உரிமை மீட்போம், தமிழ்நாடு காப்போம் என்ற முழக்கத்தை முன்னிறுத்தி அதிமுகவின் தேர்தல் பிரச்சாரம் முன்னெடுக்கப்படும்.
மக்களவை தேர்தலில் அதிமுக தலைமையில் நல்ல கூட்டணி அமையும், கூட்டணி குறித்து விஷத்தனமான பொய்யான தகவல் பரப்பப்படுகிறது. இதற்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கான காலம் விரைவில் வரும். அதன்படி, தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதும் அதிமுக கூட்டணியை அறிவிப்போம் என தெரிவித்தார்.
Read More – கடல்நீரை குடிநீராக்கும் திட்டம்.! 10 லட்சம் பேர் பயன்பெறுவர்… முதல்வர் பேச்சு.!
பாஜகவுடன் அதிமுகவுக்கு ரகசிய உடன்பாடு எதுவுமில்லை என்றும் தமிழ்நாட்டில் எத்தனை முனை போட்டி என்பது தேர்தல் வந்ததால் தெரியவரும் எனவும் செய்தியாளர் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்தார். தொடர்ந்து இபிஎஸ் கூறியதாவது, தேர்தல் களத்தில் அதிமுகவுக்கு எதிரி என்று யாரும் இல்லை. இந்த நன்நாளில் அதிமுகவை தேர்தல்களில் மகத்தான வெற்றி பெறச் செய்திட அனைவரும் அயராது உழைப்போம்.
அதேபோல், தமிழகத்தில் 2026ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று அதிமுக ஆட்சி அமைக்கும் என்பதையும் உறுதிப்படுத்துவோம் எனவும் கூறினார். இதன்பின் திமுக அரசு குறித்தும் விமர்சனத்தை முன்வைத்தார். அவர் பேசுகையில், தமிழ்நாடு மக்களின் பிரச்னைக்களுக்காக திமுக எம்.பிக்கள் குரல் கொடுக்கவில்லை. ஆட்சிக்கு வந்தவுடன் முதல் கையெழுத்து போட்டு நீட் தேர்வை ரத்து செய்வோம் என்று கூறியவர்கள், இன்னும் நீட் தேர்வை ரத்து செய்யவில்லை.
இதுபோன்று, காவிரி நதி நீர் பிரச்னை வந்தபோது தமிழ்நாடு மக்களுக்காக முன்பு அதிமுக அரசு நல்ல தீர்ப்பை பெற்றுக்கொடுத்தது. இதுதொடர்பாக அதிமுக எம்.பிக்கள் நாடாளுமன்ற இரு அவைகளிலும் அழுத்தம் கொடுத்து ஒத்தி வைக்கும் அளவுக்கு போராடினோம். அந்த அழுத்தம் காரணமாகவே காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டது. ஆனால், இப்போது தமிழக மக்களுக்காக எந்த குரலும் எழுப்பப்படவில்லை. வெறும் வாய் வார்த்தைகளால் மட்டுமே மக்களை திமுக அரசு ஏமாற்றி வருவதாகவும் விமர்சித்தார்.