வரும் தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான திமுகவின் கவர்ச்சிகரமான தேர்தல் அறிக்கையை வெளியிட்ட முக ஸ்டாலின்.
தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6ம் தேதி ஒரே கட்டமாக சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் அனைத்து அரசியல் கட்சிகளும் தங்களது கூட்டணி, தொகுதி பங்கீட்டை முடித்ததை தொடர்ந்து, வேட்பாளர் பட்டியலும் வெளியிடப்பட்டது. அந்த வகையில் சட்டப்பேரவை தேர்தலுக்கான திமுகவின் 173 பேர் கொண்ட வேட்பாளர் பட்டியலை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்டிருந்தார்.
இதையடுத்து இன்று திமுகவின் கவர்ச்சிகரமான தேர்தல் அறிக்கை வெளியிடப்படும் என்றும் தெரிவித்திருந்தார். அதன்படி, இன்று காலை பேரறிஞர் அண்ணா மற்றும் கலைஞர் நினைவிடங்களில் திமுக தேர்தல் அறிக்கையை வைத்து முக ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். இதன்பின் சென்னை அண்ணா அறிவாலயம் வந்த முக ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்து தேர்தல் அறிக்கையை வெளியிட்டார்.
2021ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலுக்கான திமுக தேர்தல் அறிக்கை;
திமுகவின் 500 வாக்குறுதிகளின் முக்கியமானவைகள்.,
- திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க மத்திய அரசை வலியுறுத்துவோம்.
- சட்டப்பேரவை நிகழ்ச்சிகள் தொலைக்காட்சியில் நேரலை ஒளிபரப்பு செய்யப்படும்.
- அமைச்சர்கள் மீதான ஊழலை விசாரிக்க தனி நீதிமன்றம் அமைக்கப்படும்.
- அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் மக்கள் குறைதீர்க்கும் முகாம்கள் நடத்தப்படும்.
- பொங்கல் விழா மாபெரும் பண்பாட்டு விழாவாக கொண்டாடப்படும்.
- ஆவின் பால் லிட்டருக்கு 3 ரூபாய் குறைக்கப்படும்.
- பெட்ரோல் விலை லிட்டருக்கு 5 ரூபாயும், டீசல் விலை லிட்டருக்கு 4 ரூபாயும் குறைக்கப்படும்.
- மலைக்கோவில்களில் கேபிள் கார் அமைக்கப்படும்.
- இந்து ஆலையங்கள் புரனமைக்கவும், குடமுழுக்கு நடத்த ஆயிரம் கோடி ஒதுக்கப்படும்.
- தமிழகத்தில் 500 இடங்களில் கலைஞர் உணவகம் அமைக்கப்படும்.
- ரேஷன் கடைகளில் ஒரு கிலோ சர்க்கரை கூடுதலாக வழங்கப்படும். உளுந்தம்பருப்பு மீண்டும் வழங்கப்படும்
- இந்து ஆலயங்கள், தேவாலயங்கள், பள்ளி வாசல்கள் சீரமைக்கப்படும்.
- அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற திட்டத்தின்படி பணி நியமனம்.
- ஆறுகளின் மாசுகளை கட்டுப்படுத்த தனி வாரியம் அமைக்கப்படும்.
- பத்திரிகையாளர்/ ஊடகத்துறையினர் தனி நல வாரியம் அமைக்கப்படும்.
- ஓய்வு நலத்தொகை உயர்த்தி அளிக்கப்படும்.
- சத்துணவு பணியாளர்கள், அங்கன்வாடி ஊழியர்கள் அரசு பணியாளர்களாக்கப்படுவர்.
- கொரோனாவால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ரூ.4000 வழங்கப்படும்.
- சமையல் எரிவாயு சிலிண்டருக்கு ரூ.100 மானியம்.
- தமிழகத்தில் 75% வேலை வாய்ப்பை தமிழர்களுக்கு தர சட்டம் நிறைவேற்றப்படும்.
- நீட் தேர்வை ரத்து செய்ய முதல் பேரவை கூட்டத்தொடரில் சட்டம் இயற்றப்படும்.
- சொந்தமாக ஆட்டோ வாங்கி பத்தாயிரம் ரூபாய் மானியம்.
- மகளிர் மகப்பேறு உதவித்தொகை ரூ.24 ஆயிரம் வழங்கப்படும்.
- அரசு பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு டேப்லட் வழங்கப்படும்.
- நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.2,500 என உயர்த்தி வழங்கப்படும்.
- சிறு குறு வணிகர்களுக்கு 15,000 ரூபாய் வரை வட்டி இல்லா கடன்.
- அரசு ஊழியர்களுக்கான மகப்பேறு விடுப்பு 12 மாதம் ஆக உயர்வு.
- முதல் தலைமுறை பட்டதாரி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்கப்படும்.
- மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணம் குறித்த விசாரணை ஆணையத்தின் அறிக்கை விரைவில் வெளியிட நடவடிக்கை எடுக்கப்படும்.
- விவசாயிகள் மின்மோட்டார் வாங்க ரூ.10000 மானியம்.
- மீனவர்களுக்கு 2 லட்சம் வீடுகள் கட்டித் தரப்படும்.
- பள்ளி மாணவர்களுக்கு காலையில் ஊட்டச்சத்தாக பால் வழங்கப்படும்.
- அரசின் திட்டங்களை செயலாக்க தனி அமைச்சகம்.
- திருச்சி சேலம் கோவை ஆகிய நகரங்களில் மெட்ரோ ரயில்.
- எட்டாம் வகுப்பு வரை தமிழ் கட்டாயப் பாடம் ஆக்கப்படும்.
- வடலூரில் வள்ளலார் பெயரில் சர்வதேச மையம் அமைக்கப்படும்.
- உள்ளூர் டவுன் பேருந்துகளில் மகளிருக்கு இலவச பயணம்.
- கூட்டுறவு நகை கடன் 5பவுன் வரை தள்ளுபடி, மகளிர் சுய உதவி குழுக்கள் கடன் தள்ளுபடி.
- கரூர், ஒசூர், வேலூர், ராமநாதபுரம் ஆகிய ஊர்களில் புதிய விமான நிலையம் அமைக்கப்படும்.
- இந்து கோவில்களுக்கு ஆன்மிக சுற்றுலா செல்ல தலா 25,000 மானியம் வழங்கப்படும்.
- நகரப் பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.
- மாதம் தோறும் மின் கட்டணம் செலுத்தும் முறை நடைமுறைக்கு வரும்.
- 30 வயதுக்குட்பட்டவர்களின் கல்விக்கடன் ரத்து செய்யப்படும்.
- பணியில் இருக்கும் காவலர் இறந்தால் ரூ.1 கோடி வழங்கப்படும்.
- சென்னை மாநகராட்சியில் லாரி நீர் தவிர்த்து குழாய் மூலம் குடிநீர் விநியோகம்.
- மீனவர், நரிகுறவர் பழங்குடி பட்டியலில் சேர்ப்பு.
இதனிடையே, சமீபத்தில் திருச்சியில் நடைபெற்ற திமுக பொதுக்கூட்டத்தில், அடுத்த 10 ஆண்டுகளுக்கான இலட்சியப் பிரகடனத்தை முக ஸ்டாலின் வெளியிட்டிருந்தார். அதில், பொருளாதாரம், வேளாண்மை, நீர்வளம், கல்வி, சுகாதாரம், நகர்ப்புற வளர்ச்சி, ஊரக உட்கட்டமைப்பு, சமூகநீதி துறைகளில் கவனம் செலுத்தி, தமிழகம் தலை நிமிரும் 7 உறுதிமொழிகளை அளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.