நெடுவாசல் ஹைட்ரோகார்பன் திட்டத்தினால் ஏற்படும் பாதிப்புகள்!!
கடந்த இரண்டு மூன்று வருட காலமாக தமிழக மக்களை உலுக்கிக் கொண்டிருக்கும் பாதிப்புகளில் ஒன்று மீத்தேன் எடுக்கும் திட்டமான ஹைட்ரோ கார்பன் திட்டம். இதற்காக தமிழகத்தில் பல இடங்களிலிருந்தும் எதிர்ப்புக் குரல் வலுக்கின்றன.
இத்திட்டத்தை மக்கள் எதிர்ப்பதற்கான காரணம் என்ன?? இத்திட்டம் கொண்டுவரப்பட்டால் அதன் பாதிப்புகள் என்ன?? என்பதுதான் நாம் இக்கட்டுரையில் காண இருக்கிறோம்.
எதிர்ப்பதன் பின்னணி..
இத்திட்டம் கொண்டுவரப்பட்டால், விளைநிலங்கள் முற்றிலுமாக பாதிக்கப்பட்டு நிலத்தடி நீர் வளம் குன்றி மக்கள் வாழ்வதற்கான ஏதுவான சூழ்நிலை இல்லாமல் போய்விடும் என்பது இத்திட்டத்தை எதிர்ப்பதற்கான பிரதான குற்றச்சாட்டாக வைக்கப்படுகிறது.
மேலும், விளைநிலங்களில் இயற்கை எரிவாயு எடுக்கையில் சுமார் 4 ஆயிரம் முதல் 5 ஆயிரம் மீட்டர் வரை ஆயிரக்கணக்கான துளைகள் இடப்பட்டு நிலத்தடி நீர் முற்றிலுமாக உறிஞ்சி வெளியேற்றப் பட்ட பின்னரே மீத்தேன் எரிவாயு எடுக்க இயலும். ஆதலால் மீத்தேன் எரிவாயு எடுத்த பிறகு நிலத்தடியில் முற்றிலுமாக நீர் இல்லாத சூழ்நிலை உருவாகும்.
மற்றொரு புறம் கடல் சார்ந்த நிலப் பகுதிகளில் இத்திட்டத்தை செயல்படுத்த இருப்பதால், அப்பகுதிகளில் நிலத்தடி நீர் குன்றி கடல் நீர் உள்ளே வரும் அபாயம் உள்ளது. அதன் பிறகு விவசாயத்திற்கான சூழ்நிலையை இல்லாமல் போய்விடும். ஆதலால் நான் இத்திட்டத்தை முற்றிலுமாக மக்கள் எதிர்க்க காரணம்.
அழிவின் விளிம்பில் புதுக்கோட்டை
ஒவ்வொரு வருடமும் காவிரி நீர் விவசாயிகளை ஏமாற்றி வருவதால் புதுக்கோட்டை மற்றும் அதைச் சுற்றியுள்ள மக்கள் கிணற்று நீர் பாசனத்தை மூலதனமாகக் கொண்டு விவசாயம் செய்து வருகின்றனர். இந்த ஹைட்ரோ கார்பன் திட்டம் இப்பகுதிகளில் அமல்படுத்தப்பட்டால் முன்னரே சொன்னபடி நிலத்தடி நீர் முற்றிலுமாக குறைந்து விடும். அதன்பிறகு, இப்பகுதிகளில் மக்கள் வாழ்வாதாரமே இல்லாமல் போய்விடும் வாய்ப்புள்ளது.
பிரதான பாதிப்புகள்
1. நிலத்தடி நீர் முற்றிலுமாக சுரண்டப்படும்.
2. மீத்தேன் எடுக்கப்பட்ட பிறகு விளைநிலங்கள் அனைத்தும் வீணாகும்.
3. நிலத்தடி நீர் மற்றும் விவசாயம் இவை இரண்டும் இல்லாததால் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும்.
4. விவசாயம் பாதிக்கப்பட்டதால், அன்றாட உணவிற்கு திண்டாடும் நிலை ஏற்படும்.
5. காவிரி நீருக்கு தற்பொழுது கையேந்தி நிற்பதை போல, உணவிற்கும் அண்டை மாநிலத்திடம் கையேந்தும் நிலை ஏற்படும்.