சேலம்-சென்னை இடையே எட்டுவழிச் சாலை திட்டம் : முதலமைச்சர் எடப்பாடி..!

Default Image

 

சேலம்-சென்னை இடையே எட்டுவழிச் சாலை திட்டம், வனப்பகுதி, மலைகளுக்கு பாதிப்பு இல்லாமல் செயல்படுத்தப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்

சட்டப்பேரவையில் பொதுப்பணித்துறை மானிய கோரிக்கைகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்தார். இதன் மீதான விவாதத்தில் பேசிய திமுக உறுப்பினர் ஐ.பெரியசாமி, NH45 தேசிய நெடுஞ்சாலையை எட்டுவழிச்  சாலையாக முதலில் மாற்றாமல், சென்னையிலிருந்து சேலம் வரையிலான  சாலையை மட்டும் பசுமைவழிச் சாலையாக்க முயற்சிப்பதன் அவசியம் என்ன என்று கேள்வி எழுப்பினார். இதேபோல, சேலம் எட்டுவழி சாலை அமைப்பதால் அதிக அளவில் விவசாயநிலங்களும், மலைகளும் பாதிக்கப்படுவதால், திட்டதிற்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராடி வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

தூத்துக்குடி சம்பவம்போல் அங்கும் ஏற்பட்டு விடக்கூடாது என்பதால், சம்மந்தப்பட்ட மக்களின் கருத்தை கேட்டு அதன் பின்னர் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தினார். இதற்கு விளக்கமளித்துப் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, சென்னை முதல் சேலம் வரையிலான சாலை பொதுமக்களின் பயன்பாட்டிற்காகத்தான் அமைக்கப்படுகிறது, யாருக்கும் தனியாக சாலை அமைக்கப்படவில்லை என்றார்.

சேலம்-சென்னை பசுமைவழிச் சாலைத் திட்டத்தை மத்திய அரசிடம் போராடிப் பெற்றிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். வனப்பகுதிக்கும் மலைகளுக்கும் எந்த பாதிப்பும் ஏற்படாத வகையில் இந்த சேலம் வரையிலான பசுமைவழிச்சாலை அமைக்கப்படவுள்ளது எனவும் அவர் கூறினார். சேலம் பசுமைவழிச்சாலை திட்டத்திற்கு குறைந்த அளவிலான மரங்களே வெட்டப்படுகிறது என்றும், இந்த சாலைகளின் இரண்டு புறமும்  3 லட்சம் மரங்கள் நடப்படவுள்ளது எனவும் முதலமைச்சர் தெரிவித்தார். இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்காக கையகப்படுத்தப்படும் விவசாய நிலங்களுக்கு கூடுதல் இழப்பீடு வழங்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

2007-08ஆம் ஆண்டில் ஹெக்டேர் நிலத்திற்கு 8 லட்சம் இழப்பீடு வழங்கப்பட்டது எனவும், தற்போது ஹெக்டேருக்கு 20 லட்சம் ரூபாய் வழங்கப்படும் எனவும் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். இந்த பசுமைவழித் திட்டத்தின் மூலம் சென்னை-சேலம் இடையே உள்ள பயணநேரம் பாதியாக குறையும் எனவும், தொழில் வளர்ச்சி அதிகரிப்பதோடு சுற்றுச்சூழலுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது எனவும் முதலமைச்சர் கூறினார்.

பசுமைவழி விரைவுச்சாலை கடந்து செல்லும் பாதைகளில் உள்ள கிராமங்களின் பொருளாதாரம் மேம்படும் எனவும், பாதிப்புகள் குறைவு, பயன்கள் அதிகம் என்பதால் இந்த திட்டத்தை செயல்படுத்துவது அவசியம் எனவும் முதலமைச்சர் குறிப்பிட்டார். எனவே, மக்களின் சந்தேகங்களை போக்க துறை அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது எனவும் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்