உயர்கல்வித்துறை சீரழிந்து விட்டதாக கல்வியாளர்கள் கண்ணீர் வடிக்கின்றனர் – எடப்பாடி பழனிசாமி

ADMK Chief Secretary Edapadi Palanisamy

அவசர கதியில் திணிக்கப்படும் பொது பாடத் திட்டத்தால் தமிழகத்தில் உயர்கல்வியின் தரம் கேள்விக்குறியாகும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது என ஈபிஎஸ் அறிக்கை. 

கல்வியாளர்களை கலந்தாலோசிக்காமல், உயர்கல்வித்துறையில் பொது பாட திட்டத்தை இந்த ஆண்டு முதல் புகுத்துவதாக திமுக அரசுக்கு கண்டனம் தெரிவித்து எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில், பொன்மனச் செம்மல்’ புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களால் தொடங்கப்பட்டு, இதய தெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்களால் போற்றி வளர்க்கப்பட்டு, என் போன்ற கோடிக்கணக்கான தொண்டர்களால் நிலை நிறுத்தப்பட்ட அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் 31 ஆண்டு கால ஆட்சியில், கல்வித் துறையில் தமிழகம் தலைநிமிர்ந்து நின்றது. குறிப்பாக, 2011-ல் திமுக ஆட்சியில் உயர் கல்வியில் 25 சதவீதமாக இருந்த மாணவர் சேர்க்கை, அதனைத் தொடர்ந்து 10 ஆண்டு கால கழக ஆட்சியில் 51 சதவீதமாக வளர்ச்சி பெற்று, இந்தியாவிலேயே உயர்கல்வித் துறையில் மற்ற மாநிலங்களுக்கு முன் உதாரணமாகவும், முதன்மை மாநிலமாகவும் திகழ்ந்தது.
கடந்த இரண்டு ஆண்டு காலம், விடியா தி.மு.க ஆட்சியாளர்கள் நடத்தும் அலங்கோல அரசில், உயர்கல்வித் துறை சீரழிந்துவிட்டதாக கல்வியாளர்கள் கண்ணீர் வடிக்கின்றனர்.

துறையின் அமைச்சர் திரு. பொன்முடி, தான் ஒரு கல்வியாளராக இருந்ததை மறந்து, தமிழ் நாட்டின் இளைஞர்களுடைய எதிர்காலத்தை நிர்ணயிக்கக்கூடிய உயர்கல்வித்துறையின் வளர்ச்சியைப் பற்றி கவலைப்படாமல் இருப்பதால், தமிழகத்தில் உயர்கல்வித் துறை அதல பாதாளத்திற்குச் சென்றுள்ளது.
நடப்பு கல்வி ஆண்டு முதல், தமிழகத்தில் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்களும் ஒரே பாடத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று விடியா அரசு உத்தரவிட்டுள்ளது. விடியா திமுக அரசின் இந்த முடிவுக்கு பேராசிரியர்கள் மற்றும் கல்லூரி நிர்வாகத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

அவசர கதியில் உருவாக்கப்பட்டு, அவசர கதியில் திணிக்கப்படும் பொது பாடத் திட்டத்தால் தமிழகத்தில் உயர்கல்வியின் தரம் கேள்விக்குறியாகும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. பொது பாடத் திட்டத்தால் தமிழக உயர் கல்வியின் தரம் குறையும் என்றும், பல்கலைக்கழக மானியக் குழு (UGC) சார்பில் உயர்கல்வி நிறுவனங்களுக்கு 45 ஆண்டுகளுக்கும் மேலாக வழங்கப்பட்டு வரும் தன்னாட்சி அந்தஸ்த்தை இழக்க நேரிடும் என்றும் கல்வியாளர்கள் எச்சரிக்கை விடுக்கிறார்கள். தமிழக உயர்கல்வித் துறை, கபட வேட திராவிட மாடல் ஆட்சியாளர்களிடம் சிக்கி, குரங்கு கையில் சிக்கிய பூமாலை போல் மாறி, சின்னாபின்னமாகி உள்ளது வேதனைக்குரியது.

எனவே, கல்வித் துறையில் ஏதேனும் மாறுதல்களை கொண்டுவரும் முன்பு, கட்சி கண்ணோட்டம் இல்லாத உண்மையான கல்வியாளர்களை அழைத்து, எதிர்கால தமிழக இளைஞர்களின் நலனை மனதில் நிறுத்தி உயர்கல்விக் கொள்கையை அமல்படுத்த வேண்டும் என்று இந்த விடியா திமுக அரசை வலியுறுத்துகிறேன்.’ என தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

LIVE NEWS TODAY
TN CM MK Stalin - BJP State Leader Annamalai
MK Stalin - TN Assembly
thiruvathirai kali (1)
Dhanush - Nayanthara
ToxicTheMovie
edappadi palanisamy MK STALIN