குளறுபடியானால் கடும் நடவடிக்கை..தனியார் பள்ளிகளுக்கு அமைச்சர் குட்டு.!
10-ஆம் வகுப்பு மாணவர்களின் மதிப்பெண் பட்டியலில் குளறுபடி செய்யும் தனியார் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கொரோனா தொற்றின் காரணமாக 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டது.மேலும் 11-ஆம் வகுப்புக்கு நடத்தப்படாமல் இருந்த பொதுத்தேர்வும் கைவிடப்படுவதாக அரசு அறிவித்தது. இதனோடு மட்டுமின்றி பொதுத்தேர்வு எழுதவுள்ள அனைத்து மாணவர்களும் தாங்கள் பெற்ற காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வு மதிப்பெண் அடிப்படையில் தேர்ச்சி அடைய செய்யப்படுவார்கள் எனவும் அரசு அறிவித்தது.
அதன்படியாக 80% அவர்கள் பெற்ற காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வுகளின் மதிப்பெண் அடிப்படையிலும் மீதமுள்ள 20% மாணவர்களின் வருகைப் பதிவேட்டின் அடிப்படையிலும் கணக்கிடப்படும் எனவும் தெரிவித்தது.இந்த நிலையில் தற்போது தேர்வுத்துறையானது இது குறித்து ஒரு உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. அதன்படி மாணவர்கள் காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வுகளில் எத்தனை மதிப்பெண் பெற்றிருந்தாலும் அவர்கள் தேர்ச்சி அடையச் செய்யப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
காரணம்; 10- வகுப்பு காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வுகளில் மாணவர்கள் பலர் தேர்ச்சி அடையவில்லை எனவும் அதில் பலர் தேர்வே எழுதவில்லை என்ற விவரம் தேர்வுத் துறையின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டதன் எதிரொலியே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது.
இந்நிலையில் 10-வகுப்பு பொதுத்தேர்வு விவகாரம் தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தற்போது தெரிவித்துள்ளாவது:
தமிழகம் முழுவதும் 10-வகுப்பு மாணவர்களின் மதிப்பெண் பட்டியலில் குளறுபடி செய்யும் தனியார் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ள அமைச்சர் செங்கோட்டையன் மதிப்பெண்களில் குறைபாடுகள் இருப்பதாக பெற்றோர்கள் , மாணவர்கள் சுட்டிக்காட்டினால் குழு ஆய்வு மூலம் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.