கல்வி கடன் ரத்து..ஓய்வூதியம்..? பட்ஜெட்டில் ஒன்னுமே புதுசா இல்ல – இபிஎஸ் காட்டம்!
பெட்ரோல், டீசல் விலை குறைப்பு குறித்து எந்த அறிவிப்பும் பட்ஜெட்டில் இல்லை என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

சென்னை : இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு 2025 2026 ஆம் ஆண்டுக்கான தமிழக அரசின் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அதில் மகளிர், மாற்றுத்திறனாளிகள், மாணவர்கள் பயன்படும் சில அம்சங்களும் இடம்பெற்று இருந்தது. 2.33 மணி நேரம் தொடர்ச்சியாக பேசி வந்த நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தனது பட்ஜெட் உரையை முடித்தார்.
பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கியவுடன் அதிமுகவை சேர்ந்தவர்கள் அமளியில் ஈடுபட்டனர். இதனையடுத்து, நீட் தேர்வு ரத்து, அரசு ஊழியர்களுக்கான ஓய்வூதியம் , கல்வி கடன் ரத்து குறித்த எந்த அறிவிப்பும் இல்லை என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசியதாவது ” திமுக ஆட்சிக்கு வந்ததும் பெட்ரோல் ரூ.3 குறைக்கப்பட்டது. டீசல் விலை குறைக்கப்படவில்லை இந்த பட்ஜெட்டில் அது பற்றிய எந்த அறிவிப்புகளும் வரவில்லை. முன்னதாக அதிமுக ஆட்சியில் என்னென்ன பட்ஜெட்கள் அறிவிக்கப்பட்டது அதே தான் இப்போது அறிவித்திருக்கிறார்கள்.
புதிதாக பட்ஜெட்டில் எந்த அறிவிப்பும் வரவில்லை. நீட் தேர்வு ரத்து, அரசு ஊழியர்களுக்கான ஓய்வூதியம் , கல்வி கடன் ரத்து குறித்த எந்த அறிவிப்பும் இல்லை. அதைப்போல, 100 நாள் வேலை திட்ட ஊதியத்தை உயர்த்துவதாக தெரிவித்தார்கள் இடம் பெறவில்லை. நெல், கரும்புக்கு குறைந்தபட்ச ஆதார விலையை உயர்த்துவதாக தெரிவித்திருந்தனர், இடம்பெறவில்லை. சமையல் எரிவாயு மானியம் வழங்குவதாக தெரிவித்தனர் அதுவும் இடம்பெறவில்லை.
இப்போது அறிவிக்கப்பட்டுள்ள அந்த காலை உணவுத் திட்டம் புதிய திட்டம் அல்ல அதுவும் அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்டதுதான். மற்றபடி திமுக அரசு அறிவித்துள்ள பட்ஜெட் அறிவிப்பு, வெறும் வெற்று அறிவிப்பாகத்தான் உள்ளது. மாதம்தோறும் மின் கட்டணம் செலுத்தும் முறை குறித்து பட்ஜெட்டில் அறிவிக்கப்படவில்லை. ரேஷனில் 1 கிலோ சர்க்கரை கூடுதலாக வழங்கப்படும் என்ற வாக்குறுதி என்ன ஆனது? கடந்த 4 ஆண்டுகளில் 50,000 அரசுப் பணியிடங்கள் மட்டுமே நிரப்பப்பட்டன.
ஓராண்டில் 40,000 இடங்களை நிரப்ப முடியுமா? 2026 தேர்தலில் வாக்குகளை பெறுவதற்காக வெற்று அறிவிப்புகளை மட்டுமே மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ளார். கடன் வாங்கித்தான் நடைமுறையில் உள்ள பல திட்டங்களை செயல்படுத்த வேண்டிய நிலை உள்ளது. அதிக கடன் வாங்குவதில் முதல் மாநிலமாக தமிழகம் இருக்கும் நிலையில் எப்படி புதிய திட்டங்களை செயல்படுத்துவார்கள் ” எனவும் எடப்பாடி பழனிசாமி காட்டத்துடன் தெரிவித்தார்.