EdappadiKPalaniswami: விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.35,000 வழங்குக – இபிஎஸ்
குறுவை சாகுபடி தண்ணீர் இல்லாமல் பாதிக்கப்பட்டிருந்தால் விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கப்படும் என வேளாண்துறை அறிவித்திருந்தது. காவிரியில் நீர் வரத்து குறைந்து பயிர்கள் கருகும் நிலையில், விவசாயிகள் நலன் கருதி தமிழக அரசு அறிவித்திருந்தது. அதன்படி, மாநில அரசின் பேரிடர் மேலாண்மை நிதியில் இருந்து நிவாரணம் வழங்கப்படும் என்றும் குறுவை சாகுபடிக்கு வழக்கமாக காப்பீடு செய்வதில்லை என்றபோதும் மாநில அரசு சார்பில் நிதி வழங்க முடிவுசெய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இந்தாண்டு குறுவை சாகுபடியில் 10 லட்சம் ஏக்கர் பயிரிடப்பட்ட நிலையில், 2 லட்சம் ஏக்கர் அறுவடையானது எனவும் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில், குறுவை சாகுபடி பாதிப்பால் நஷ்டமடைந்த விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.35,000 இழப்பீடு வழங்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பான அறிக்கையில், நடப்பாண்டு குறுவை சாகுபடி செய்து பாதிக்கப்பட்ட விவசாயிகளின் விவரங்களை கணக்கெடுத்து நிவாரணம் வழங்க வேண்டும். தென்மேற்கு பருவமழை பொய்த்த மாவட்டங்களை வறட்சி மாவட்டங்களாக அறிவிக்க வேண்டும். பாதிக்கப்பட்ட வேளாண் நிலங்களை மீண்டும் ஒருமுறை முழுமையாக கணக்கீட்டு காப்பீடு வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்.
மேலும், ரூ.2,319 கோடி தொகை செலுத்தியுள்ள திமுக அரசு வெறும் ரூ.560 கோடி மட்டுமே இழப்பீடாக பெற்றுள்ளது எனவும் குற்றசாட்டியுள்ளார். 2021-22 ஆம் ஆண்டு விவசாயிகளுக்கு வெறும் ரூ.100 முதல் ரூ.600 வரை மட்டுமே இழப்பீடு தரப்பட்டுள்ளது. போதிய நீர் இல்லாததால் சுமார் 3.50 லட்சம் ஏக்கர் நெற்பயிர்கள் கருகி கடும் பாதிப்பு அடைந்துள்ளது என்றும் கர்நாடகாவில் தன் கூட்டாளி காங்கிரஸ் அரசுடன் பேசி தண்ணீர் பெற முதலமைச்சர் நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் குற்றசாட்டியுள்ளார்.