எடப்பாடி பழனிசாமி தமிழ்நாட்டு மக்களுக்கு செய்த மிகப்பெரிய துரோகம்…எம்பி கனிமொழி காட்டம்!
அதிமுக - பாஜக கள்ளக்கூட்டணி என முதல்வர் சொன்னது உறுதியாகியுள்ளது என்று திமுக எம்பி கனிமொழி தெரிவித்துள்ளார்.

சென்னை : 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக தலைமையில் பாஜக கூட்டணி அமையும் என கூறப்பட்டு வந்த நிலையில், இபிஎஸ், அண்ணாமலை டெல்லி பயணம் , பாஜக மாநிலத் தலைவர் மாற்றம் உள்ளிட்ட பல்வேறு நகர்வுகளை அடுத்து நேற்று இரவு பாஜக மூத்த தலைவரும் மத்திய அமைச்சருமான அமித்ஷா சென்னை வந்தார்.
அதனை தொடர்ந்து இன்று கட்சி நிர்வாகிகளுடன் பலகட்ட ஆலோசனையை அடுத்து, பத்திரிகையாளர்களை சந்தித்து 2026 சட்டமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அதிமுக – பாஜக கூட்டணியாக தேர்தலை சந்திக்கும் என்று தெரிவித்து கூட்டணியை உறுதிசெய்தார். இது குறித்து அரசியல் தலைவர்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில், திமுக எம்பி கனிமொழி பேசியுள்ளார்.
இது குறித்து பேசிய எம்பி கனிமொழி ” இன்று என்னைக்குமே பாஜகவுடன் இனிமேல் கூட்டணி வைக்கமாட்டோம் எப்போதும் வைக்கமாட்டோம் என கூறி வந்த அதிமுக எடப்பாடி பழனிசாமி அவர்கள் மேடையில் இருக்கும்போது அதே மேடையில் இருந்த அமைச்சர் அமித்ஷா பாஜக – அதிமுக தேர்தல் கூட்டணியை அறிவித்துள்ளார். பல்வேறு நேரங்களில் தொடர்ந்து பாஜகவுடைய திட்டங்களை எதிர்ப்பதாக சொல்லிக்கொண்டு இருந்த அதிமுக எடப்பாடி அதே மேடையில் இன்று மௌனமாக இருக்கிறார்.
யாரின் தலைமையில் கூட்டணி அமைகிறதோ, அவர்கள்தான் கூட்டணியை அறிவிப்பார்கள். ஆனால், இன்று பேசக் கூடிய உரிமை கூட எடப்பாடி பழனிசாமிக்கு இல்லை.மக்களை நீண்ட காலமாக ஏமாற்ற முடியாமல், அந்த கூட்டணியை வெளிப்படையாக அறிவிக்க வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகியுள்ளார்கள்.
கூட்டணியில் இருந்து விலகினாலும் தொடர்பில்தான் இருக்கிறார்கள் என முதலமைச்சர் தொடர்ச்சியாக கூறி வந்தது உண்மை என இன்று அம்பலமாகியுள்ளது. அதிமுக தொண்டர்களுக்கு மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களுக்கும் மிகப்பெரிய துரோகத்தை எடப்பாடி பழனிசாமி செய்துள்ளார்” எனவும் கனிமொழி தெரிவித்துள்ளார்.