காவேரி நீர் விவகாரம்.. இல்லாத ஊருக்கு வழி முதலமைச்சர்.! இபிஎஸ் கடும் கண்டனம்.!
காவேரி மேலாண்மை வாரியம் உத்தரவின் படி தமிழகத்திற்கு திறந்துவிட வேண்டிய தண்ணீரின் அளவுக்கு மிக குறைவான அளவே, காவேரி நீரை கர்நாடகா அரசு திறந்து விட்டுள்ளது. தமிழகத்திற்கு குறிப்பிட்ட அளவுப்படி உரிய அளவு நீரை திறந்து விட வேண்டும் என்று தமிழக முதல்வர் கடிதம் வாயிலாகவும், தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் நேரடியாக சென்றும் கர்நாடக அரசுக்கு உத்தரவிட கோரி மத்திய அரசிடம் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், காவேரி நதிநீர் பங்கீட்டு விவகாரத்தில் தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என கூறி, அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி தனது கண்டனத்தை அறிக்கை வாயிலாக பதிவு செய்துள்ளார்.
அதில், காவேரி நீர் விவகாரத்தில் இல்லாத ஊருக்கு வழிதேடும் தமிழக முதல்வர் நடவடிக்கைக்கு தனது கடும் கண்டனம் என பதிவு செய்துள்ளார். 2018ல் உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி, காவேரி மேலாண்மை வாரியம் உத்தரவின்படி, கர்நாடக அரசு, ஆண்டுக்கு 177.25 டிஎம்சி தண்ணீரை தமிழகத்திற்கு வழங்க வேண்டும்.
இந்த விவகாரத்தில் உச்சநீதிமன்றம் உத்தரவின்படி காவேரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அணுகி, ஆலோசனை கூட்டத்தை கூட்டி தமிழகத்திற்கான தண்ணீரின் அளவை கேட்டு பெறவேண்டும். அது முதல்வரின் பொறுப்பாகும். டெல்டா பகுதியில் கருகிக்கொண்டு இருக்கும் நெற்பயிரை காப்பாற்ற வேண்டும்.
காவேரி நதிநீர் பங்கீடு விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் டெல்டா பகுதி விவசாயிகளை ஒன்றிணைத்து அதிமுக சார்பில் மாபெரும் போராட்டம் நடத்தப்படும் என எடப்பாடி பழனிச்சாமி அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
காவிரி நீர் விவகாரம் – இல்லாத ஊருக்கு வழி தேடும் விடியா அரசின் முதலமைச்சருடைய போக்குக்கு கடும் கண்டனம்!
– மாண்புமிகு கழகப் பொதுச் செயலாளர் திரு. @EPSTamilNadu அவர்கள். pic.twitter.com/0f8u6vzvjL
— AIADMK (@AIADMKOfficial) August 5, 2023