தவெக vs திமுக : “விஜய் தொண்டர்களுக்காக தான் அப்படி பேசியிருப்பார்!” இபிஎஸ் பேட்டி!
விஜய் அவரது தொண்டர்களை உற்சாகப்படுத்த தவெக vs திமுக என கூறியுள்ளார் என்று எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார்.

சேலம் : நேற்று தமிழக வெற்றிக் கழக கட்சியின் முதல் பொதுக்குழு கூட்டம் சென்னை திருவான்மியூரில் நடைபெற்றது. இந்த பொதுக்குழு கூட்டத்தில் பேசிய அக்கட்சி தலைவர் விஜய், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் பிரதமர் மோடி ஆகியோரது பெயர்களை குறிப்பிட்டே கடும் விமர்சனங்களை முன்வைத்தார்.
அப்போது அவர் கூறுகையில், இனி தமிழக அரசியலில் ஒன்னு இந்த TVK (தமிழக வெற்றிக் கழகம்) இன்னொன்று DMK (திராவிட முன்னேற்றக் கழகம்) இந்த இரண்டு கட்சிக்கும் தான் போட்டி என கூறியிருந்தார். தமிழ்நாட்டில் பிரதான எதிர்க்கட்சியாக அதிமுக உள்ள நிலையில் விஜயின் இந்த கருத்து அதிமுகவினர் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியது. பலரும் தங்கள் கருத்துக்களை கூறினர்.
இதுபற்றி சேலத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்களிடம் கருத்து கூறினார். அதில், ” இது அவருடைய கருத்து. எல்லா கட்சியினரும் தங்கள் வளர்வதற்கும், தங்கள் தொண்டர்களை உற்சாகப்படுத்த அவர் அப்படி சொல்லியிருப்பாங்க. எல்லாருமே அப்டித்தான். எனக் கூறினார்.
மேலும், தவெக vs திமுக என்ற கேள்விக்கு விஜய்தான் பதில் சொல்லவேண்டும். பிரதான எதிர்க்கட்சி நாங்க தான். என கூறினார். விஜய் அதிமுக தலைவர்கள் பற்றி விமர்சிக்காதது குறித்து பேசிய இபிஎஸ், எங்கள் தலைவர்கள் அப்படி ஆட்சி செய்து இருக்கிறார்கள். அதனால் தான் புதிய கட்சி தொடங்குபவர்கள் கூட என அனைவரும் எங்கள் தலைவர்களை கோடிட்டு காட்டுகின்றனர் என எடப்பாடி பழனிச்சாமி பேசியுள்ளார்.