CAA சட்டத்தை அதிமுக ஒருபோதும் அனுமதிக்காது – எடப்பாடி பழனிசாமி
குடியுரிமை திருத்த (CAA) சட்டத்தால் சிறுபான்மையின மக்களுக்கு பாதிப்பு ஏற்படுவதை அதிமுக ஒருபோதும் அனுமதிக்காது என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். சிஏஏ சட்டம் ஒரு வாரத்திற்குள் நாடு முழுவதும்நடைமுறைக்கு வரும் என்று மத்திய அமைச்சர் கூறியிருந்த நிலையில், இதற்கு எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் எதிர்வினையாற்றி வருகின்றனர்.
அந்தவகையில், தமிழ்நாட்டினுள் சிஏஏ சட்டத்தை காலூன்ற விடமாட்டோம் என உறுதி அளிக்கிறேன் என முதலமைச்சர் முக ஸ்டாலின் தெரிவித்திருந்தார். ஆனால், இலங்கைத் தமிழர்களுக்கும், இஸ்லாமியர்களுக்கும் எதிரான சிஏஏ, சட்டமானதற்கு முழு காரணம் நாடாளுமன்றத்தில் அதிமுக ஆதரித்து வாக்களித்ததுதான் எனவும் விமர்சித்திருந்தார். இந்த நிலையில், சிஏஏ சட்டமா தொடர்பாக இபிஎஸ் எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
உறுதியாக சொல்கிறேன், தமிழ்நாட்டில் சிஏஏவை காலூன்ற விடமாட்டோம் – முதல்வர் ஸ்டாலின்
அதில், CAA சட்டத்தால் தமிழகத்தில் உள்ள இஸ்லாமியர்களுக்கும், ஈழத் தமிழர்களுக்கும் பிரச்சனை ஏற்பட்டால் எங்கள் அரசு பார்த்துக்கொண்டு சும்மா இருக்காது என்பதை ஏற்கனவே எங்களது ஆட்சியின் போது சட்டமன்றத்திலே தெரிவித்தோம். ஆனால், மதவாத நாடக எதிர்ப்பு ஒன்றையே அரசியல் மூலதனமாக்கி, சிறுபான்மை மக்களை ஏமாற்றி, ஆட்சியில் இருக்கும்போது பா.ஜ.க-வுடன் கூட்டு, ஆட்சியில் இல்லாத போது எதிர்ப்பு என்று சிறுபான்மையினருக்கு துரோகம் செய்து வருகிறது திமுக.
கோவை கலவரத்தை கைகட்டி வேடிக்கை பார்த்து இஸ்லாமியர்களின் முதுகில் குத்திய திமுக-விற்கு, எங்களை நோக்கி கை நீட்ட எந்த அருகதையும் இல்லை. சிறுபான்மை மக்களை பாதிக்கும் NIA, UAPA சட்டங்களையெல்லாம் ஆதரித்துவிட்டு, வெறும் அறிக்கைகளிலும், மேடைப் பேச்சுகளிலும் மட்டும் பாஜக எதிர்ப்பைக் காட்டிவிட்டு, மறுபுறம் பொன்னாடை போர்த்தி, சாமரம் வீசி, வரவேற்பு அளித்துவிட்டு, சிறுபான்மை மக்களின் காவலனாக வேஷம் போடும் திமுக-வின் நாடகத்தை மக்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.
எனவே, அதிமுக என்றும் சிறுபான்மையின மக்களின் பக்கம் அரணாக நின்று இன்றும் அடக்குமுறை சட்டங்களை உறுதியாக எதிர்க்கும் என கூறியுள்ளார்.