ஆர்எஸ்எஸ் பேரணி : அதிமுக எம்எல்ஏவின் ‘முக்கிய’ பதவியை பறித்த இபிஎஸ்.!
ஆர்எஸ்எஸ் பேரணியை தொடங்கி வைத்த அதிமுக எம்எல்ஏ தளவாய் சுந்தரம், கட்சி பொறுப்புகளில் இருந்து நீக்கப்படுவதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார்.
சென்னை : விஜயதசமியை முன்னிட்டு ஆர்எஸ்எஸ் அமைப்பினர் தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் பேரணி நடத்தி வருகின்றனர். கடந்த அக்டோபர் 6ஆம் தேதி ஞாயிற்று கிழமையன்று கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலை அடுத்த ஈசாத்தி மங்கலம் பகுதியில் இருந்து பூதப்பாண்டி வரை ஆர்எஸ்எஸ் பேரணி நடைபெற்றது.
இந்த ஆர்எஸ்எஸ் பேரணியை கன்னியகுமாரி தொகுதி அதிமுக எம்எல்ஏவும், முன்னாள் அமைச்சருமான தளவாய் சுந்தரம் தொடங்கி வைத்தார். ஏற்கனவே அதிமுக – பாஜக கூட்டணி முறிவு ஏற்பட்டு கடந்த நாடாளுமன்ற தேர்தலில் தனி தனி கூட்டணியுடன் தான் போட்டியிட்டனர். இப்படியான சூழலில் பாஜகவின் தாய் அமைப்பாக கருதப்படும் ஆர்எஸ்எஸ் அமைப்பின் பேரணியை தளவாய் சுந்தரம் தொடங்கி வைத்த விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியது.
இந்நிலையில், தளவாய் சுந்தரம் கட்சி செயல்பாட்டை மீறி செயல்பட்டதாக கூறி அவரை கட்சி முக்கிய பொறுப்புகளில் இருந்து நீக்கி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், ” கழகத்தின் கொள்கை-குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாகவும். கழகத்தின் சட்ட திட்டங்களுக்கு மாறுபட்டு நடந்துகொண்டதாகவும் கிடைத்த தகவலின் அடிப்படையில்,
இதுகுறித்து விசாரணை மேற்கொள்ள வேண்டி இருப்பதால், கன்னியாகுமரி கிழக்கு மாவட்டத்தைச் சேர்ந்த என்.தளவாய்சுந்தரம், M.L.A., தான் வகித்து வரும் கழக அமைப்புச் செயலாளர், சுன்னியாகுமரி கிழக்கு மாவட்டக் கழகச் செயலாளர் ஆகிய பொறுப்புகளில் இருந்து தற்காலிகமாக விடுவிக்கப்படுகிறார்.” என எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் ‘புரட்சித் தமிழர்’ திரு. @EPSTamilNadu அவர்களின் முக்கிய அறிவிப்பு. pic.twitter.com/G5TlliCgoe
— AIADMK – Say No To Drugs & DMK (@AIADMKOfficial) October 8, 2024