2 நாள் மழைக்கே இற்றுப்போனது தமிழகம்.! திமுக அரசு மீது இபிஎஸ் கடும் விமர்சனம்.!
2 நாள் மழைக்கே இற்றுப்போன தமிழ்நாடு. வாய்ச்சொல் வீரர்களால் அல்லலுறும் பொதுமக்கள் என ஆளும் திமுக அரசை விமர்சித்து முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அவர் குறிப்பிட்டுள்ள அறிக்கையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று பேட்டியில், அம்மா ஆட்சியில் 10 ஆண்டுகளில் நிறைவேற்றாததை கடந்த ஒன்றரை ஆண்டுகளில் திமுக அரசு நிறைவேற்றி விட்டதாக கூறினார். அதிமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட சில திட்டங்களில் ஒரு சிலவற்றை தொடர்ந்து செய்துவிட்டு தாங்கள் செய்ததாக குறிப்பிடுகிறார்கள் என தான் வெளியிட்டுள்ள அறிக்கையில் விமர்சித்து இருந்தார்.
மேலும், ஐந்து ஆண்டுகள் மேயராகவும் 5 ஆண்டுகள் உள்ளாட்சித் துறை அமைச்சராகவும் இருந்த திரு.ஸ்டாலின் சென்னையை சிங்கார சென்னையாக மாற்றுவோம் என்று கூறினார். அப்படி செய்திருந்தால் நாங்கள் எங்களுடைய ஆட்சி காலத்தில் எதுவும் செய்திருக்க வேண்டியது இல்லை.
ஆனால், மேயராக இருந்த ஐந்து ஆண்டுகளிலும், உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்த 5 ஆண்டுகளிலும் எதுவும் செய்யாத காரணத்தால் தான், அம்மாவின் அரசு கடந்து 10 ஆண்டுகளில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தியது. இதனை குறிப்பிட்டு விமர்சித்துள்ளர்.
மேலும், தனது ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள் என முழு நீள பட்டியலை குறிப்பிட்டு உள்ளார் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி.
அவர் குறிப்பிட்டதில், மழைநீர் தேங்கும் பகுதிகள் 306 இல் இருந்து மூன்றாக குறைக்கப்பட்டது. எனவும், சென்னையில் உள்ள 210 நீர் நிலைகளில் 140 நீர்நிலைகள் தூர்வாரப்பட்டன. 40 நீர்நிலைகள் அதற்கான பணிகள் நடைபெற்று வந்தன. திமுக அரசு வந்த உடன் இந்த பணிகள் நிறுத்தப்பட்டன. இதன் காரணமாகத்தான் கடந்த ஆண்டு பருவ மழையில் சென்னை தத்தளித்தது.
கூவம் ஆற்றின் ஓரத்தில் 17 ஆயிரம் குடும்பங்கள் அப்புறப்படுத்தப்பட்டு, அவர்களுக்கு புதிய நிரந்தர குடியிருப்புகள் அமைக்கப்பட்டன.
மழைக்காலங்களில் 24 மணி நேரமும் பணியாற்றுவதற்கு கட்டுப்பாட்டு அறை உருவாக்கப்பட்டு, 75 பணியாளர்களுடன் அத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டது.
சென்னையில் உள்ள 16 சுரங்கப்பாதைகளிலும் மழை நீரை அகற்றுவதற்கு 7.5 எச்.பி திறன் கொண்ட 600 மோட்டார் பம்புகள் தயார் நிலையில் வைக்கப்பட்டன.
தற்போதைய திட்டம் சரியாக போடப்படவில்லை. எங்கு திரும்பினாலும் சாலைகள் தோண்டப்பட்டு கமிஷனுக்காக வேலை நடைபெற்று வருகிறது என விமர்சித்துள்ளார்.
ஆங்காங்கே தோண்டப்படும் பள்ளங்கள், எது மழை நீர் வடிகால் பள்ளம்? எது கழிவுநீர் வடிகால் பள்ளம் என தெரியாத வண்ணம் இருக்கிறது.
கடந்த வாரம் கூட தோண்டப்பட்ட பள்ளத்தில் எந்தவித முன்னெச்சரிக்கை பலகையும் இல்லாத காரணத்தால் ஒரு பத்திரிக்கையாளர் உயிரிழந்துவிட்டார்
இந்த அரசை மக்கள் நம்பாமல், மக்கள் தங்களை தாங்களே பாதுகாத்துக் கொள்ள வேண்டும். குறிப்பாக குடிநீரை காய்ச்சி பருக வேண்டும். வெளியே செல்லும் போது, சாலை கடக்கும் போது பள்ளங்கள் ஆகியவற்றை கவனத்தில் கொண்டு கவனமாக செல்ல வேண்டும். என்பதையும் கேட்டுக்கொள்கிறேன். என அந்த அறிக்கையில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி குறிப்பிட்டுள்ளார்.
“2 நாள் மழைக்கே இற்றுப் போன தமிழகம், வாய்ச்சொல் வீரர்களால் அல்லலுறும் மக்கள்!”
கையாலாகாத விடியா திமுக அரசுக்கு மாண்புமிகு கழக இடைக்காலப் பொதுச்செயலாளர் திரு. @EPSTamilNadu அவர்கள் கடும் கண்டனம்.#TNRains #chennairains pic.twitter.com/PIu7H8kwq8
— AIADMK (@AIADMKOfficial) November 2, 2022