அதிமுக – பாஜக கூட்டணி : “இனி யாரும் பேசாதீங்க..,” கட்சி நிர்வாகிகளுக்கு கடிவாளம் போட்ட இபிஎஸ்?
அதிமுக கூட்டணி,கட்சி நிலைப்பாடு குறித்து கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் யாரும் பேச வேண்டாம் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிவுறுத்தியுள்ளார்.

சென்னை : 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக – பாஜக கூட்டணியா? வெற்றி பெற்ற பிறகு கூட்டணி அரசா என்ற கேள்விகளும், அதற்கான பதில்களும் இரு தரப்பில் இருந்தும் மாறி மாறி வந்து கொண்டிருக்கின்றன. கூட்டணி அரசுக்கு (வெற்றி பெற்றால் அமைச்சரவையில் இடம்) வாய்ப்பே இல்லை என அதிமுக தரப்பு கூறி வரும் நிலையில், அதுபற்றி தேசிய தலைமை ஆலோசித்து முடிவு எடுக்கும் என தமிழக பாஜக கூறி வருகிறது.
மத்திய அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான அமித்ஷா, அதிமுக – பாஜக கூட்டணி பற்றி அறிவிக்கையில்,”2026-ல் NDA கூட்டணி தமிழ்நாட்டில் ஆட்சியமைக்கும்” எனக் கூறினார். “அவர் கூட்டணி ஆட்சி அமைக்கும் என்று தான் கூறினார். கூட்டணி அரசு என்று கூறவில்லை” என எடப்பாடி பழனிசாமி கூறினார். “தமிழ்நாட்டில் கூட்டணி அரசு நடந்ததே இல்லை, நடக்கபோவதும் இல்லை.” என அதிமுக எம்பி தம்பிதுரை கூறினார். “இது பற்றி தேசிய தலைமை முடிவு செய்யும்” என நயினார் நாகேந்திரன் கூறினார்.
இபப்டியாக ஒவ்வொரு தலைவரும் ஒவ்வொரு விதமாக கூற, அதிமுக – பாஜக கூட்டணியில் விரிசல் விழப்போகிறது என மாற்று கட்சித் தலைவர்கள் விமர்சிக்க தொடங்கி விட்டனர். இந்த விவகாரங்களை கவனித்த அதிமுக தலைமை ஒரு முக்கிய அறிவிப்பை கட்சி நிர்வாகிகளுக்கும் தொண்டர்களுக்கும் அறிவித்துள்ளது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அதிமுக தொண்டர்களுக்கு ஒரு முக்கிய அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார். அதில், ” கட்சியின் நிலைப்பாடு, கட்சியின் செயல்பாடு என கட்சி பற்றி பத்திரிகைகளுக்கோ, சமூக வலைத்தளத்திலோ, தொலைக்காட்சியிலோ பேசக்கூடாது. கட்சியின் முக்கிய முடிவுகள் மற்றும் நிலைப்பாடு குறித்து கட்சித் தலைமை உரிய நேரத்தில் தெரிவிக்கும் எனவும், அதுவரை எதுவும் பேச வேண்டாம் என கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு இபிஎஸ் வலியுறுத்தி உள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளார்.