திடீரென டெல்லி பயணம்… பாஜகவுடன் கூட்டணி? எடப்பாடி பழனிசாமி விளக்கம்.!
டெல்லியில் எடப்பாடி பழனிசாமியை மாநிலங்களவை உறுப்பினர்களான தம்பிதுரை, சி.வி சண்முகம் உள்ளிட்டோர் வரவேற்றுள்ளனர்.

டெல்லி : டெல்லி சட்டப்பேரவை கூட்டத் தொடர் நடந்து வரும் நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி திடீரென டெல்லி பயணம் மேற்கொண்டுள்ளார். டெல்லியில் அவரை மாநிலங்களவை உறுப்பினர்களான தம்பிதுரை, சி.வி சண்முகம் உள்ளிட்டோர் வரவேற்றுள்ளனர்.
இப்பயணத்தில் முக்கிய பாஜக தலைவர்களை சந்தித்து கூட்டணி பேச்சுவார்த்தை பேசுவார்களா என எதிர்பார்ப்பு அரசியல் களத்தில் எழுந்துள்ளது. அதன்படி, டெல்லியில் இன்று மாலை அமித்ஷாவை இபிஎஸ் சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 2026 சட்ட பேரவைத் தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு மட்டும் உள்ள நிலையில், தற்போதைய பேரவைக் கூட்டம் நடைபெற்று வரும் சூழலில் அமித்ஷாவை அவர் சந்திப்பது முக்கித்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
தமிழ்நாட்டின் சட்ட ஒழுங்கு குறித்து புகார் அளிக்க சென்றதாக ஒருதரப்பினரும், கூட்டணி பேச்சுவார்த்தைக்காக சென்றதாக மற்றொரு தரப்பினரும் கூறுகின்றனர். ஆனால், டெல்லியில் புதிதாக திறக்கப்பட்ட கட்சி அலுவலகத்தை காணவே டெல்லிக்கு சென்றதாக அவர் விளக்கம் அளித்துள்ளார். முக்கிய நபர்களுடன் சந்திப்பு ஏதேனும் நடைபெற்றதா என்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு அவர் இவ்வாறு பதில் அளித்துள்ளார்.
கடந்த மாதம் 10ம் தேதி அதிமுகவின் டெல்லி அலுவலகத்தை எடப்பாடி பழனிசாமி காணொளி வாயிலாக திறந்து வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனிடையே, டெல்லி சென்று எடப்பாடி பழனிசாமி யாரை சந்திப்பார் என்ற தகவல் வந்திருப்பதாக பேரவையில் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார்.
அதே நேரம் ‘அங்கு சந்திக்கும் நபரிடம் இருமொழிக் கொள்கையை வலியுறுத்த வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார். தமிழ்நாடு வந்த கர்நாடக, கேரள தலைவர்களிடம் நீர் பங்கீடு குறித்து பேசியிருக்கலாமே என இபிஎஸ் கேட்டிருந்த நிலையில், தற்போது மும்மொழிக் கொள்கை விவகாரத்தில் ஸ்டாலின் கேள்வி எழுப்பியிருக்கிறார்.
எடப்பாடி பழனிசாமியின் இந்த திடீர் பயணம், தமிழ்நாட்டின் அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், அவர் சென்னை திரும்பிய பின்னர், பயணத்தின் நோக்கம் குறித்து விரிவான விளக்கம் அளிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.