“திராவிடம் என்ற சொல் அடித்தட்டு மக்கள் வாழ்வின் பேரொளி”..எடப்பாடி பழனிசாமி கண்டனம்!
ஆளுநர் கலந்து கொண்ட விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்தில் திராவிடம் புறக்கணிக்கப்பட்டது மாபெரும் தவறு என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி எக்ஸ் வலைத்தள பக்கத்தில் கண்டனத்தை தெரிவித்துள்ளார்.
சென்னை : இந்தி மாதக் கொண்டாட்ட நிறைவு விழா இன்று டிடி தமிழ் அலுவலகத்தில் நடைபெற்றது. அதில் ஆளுநர் ரவி சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டிருந்தார். நிகழ்ச்சியில் தமிழ்த் தாய் வாழ்த்து பாடும் போது “தெக்கணமும் அதிற்சிறந்த திராவிட நல் திருநாடும்” என்ற வரியை விட்டு விட்டு அதற்கு அடுத்த வரியான தக்கசிறு பிறைநுதலும் தரித்தநறுந் திலகமுமே பாடல் வரி பாடப்பட்டது.
இதன் காரணமாக ஆளுநர் ரவி பங்கேற்ற விழாவில் பாடப்பட்ட தமிழ்த்தாய் வாழ்த்தில் திட்டமிட்டுத் தவிர்க்கப்பட்டதா? என இந்த விவகாரம் பெரிய சர்ச்சையாக வெடித்துள்ளது. இந்த விவகாரம் குறித்து அரசியல் தலைவர்கள் பலரும் தங்களுடைய கண்டனங்களைத் தெரிவித்து வருகிறார்கள். காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகை, முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது கண்டனங்களைத் தெரிவித்து இருந்த நிலையில், தற்போது எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தனது கண்டனத்தைத் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் கூறியதாவது ” இன்று சென்னை தொலைக்காட்சி நிலையத்தில் மேதகு ஆளுனர் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் பெருமைக்குரிய தமிழ்தாய் வாழ்த்து பாடும் பொழுது அஃதில் வரக்கூடிய “தெக்கனமும் அதிற்சிறந்த திராவிட நல் திருநாடும்” என்ற வரிகள் புறக்கணிக்கப்பட்டது மாபெரும் தவறாகும்.
இச்செயல் மிகவும் கண்டனத்திற்குரியது. திராவிடம் என்ற சொல் அடித்தட்டு மக்கள் வாழ்வின் பேரொளி! திராவிடம் என்ற சொல் அடக்குமுறைக்கு எதிரான பெரும் புரட்சி!திராவிடம் என்ற சொல் உலகின் தொன்மையான நாகரீகத்தின் குறியீடு! தமிழக மக்களின் உணர்வை புண்படுத்தும், திராவிட பண்பாட்டை சிறுமைப்படுத்தும் வேலைகளை எவர் செய்து இருந்தாலும் கைவிட வேண்டும்” என காட்டத்துடன் பதிவிட்டுள்ளார்.
இன்று சென்னை தொலைக்காட்சி நிலையத்தில் மேதகு ஆளுனர் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் பெருமைக்குரிய தமிழ்தாய் வாழ்த்து பாடும் பொழுது அஃதில் வரக்கூடிய
“தெக்கனமும் அதிற்சிறந்த திராவிட நல் திருநாடும்”
என்ற வரிகள் புறக்கணிக்கப்பட்டது
மாபெரும் தவறாகும்.
இச்செயல் மிகவும்…— Edappadi K Palaniswami – Say No To Drugs & DMK (@EPSTamilNadu) October 18, 2024