“அரசியல் சூழ்நிலைக்கு ஏற்றவாறு கூட்டணி அமைக்கப்படும்” – எடப்பாடி பழனிச்சாமி.!
தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு குறித்து உள்துறை அமைச்சர் அமித்ஷா விரிவாக கேட்டுக்கொண்டார் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

சென்னை : டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை நேற்றிரவு அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் நேரில் சந்தித்தார். கூட்டணியில் இருந்து பிரிந்த அதிமுக பாஜக வரும் தேர்தலில் மீண்டும் கூட்டணியமைக்கும் என்று பேசப்படும் நிலையில், இந்த சந்திப்பு நிகழ்ந்துள்ளது.
டெல்லியில் கட்டப்பட்ட அதிமுக அலுவலகத்தை பார்வையிட செல்வதாக கூறிவிட்டு, உள்துறை அமைச்சர் அமித்ஷாவை எடப்பாடி பழனிச்சாமி சந்தித்தது தமிழக அரசியலில் பேசுபொருளாக மாறியது.
இந்த நிலையில், பாஜகவுடன் கூட்டணியா என்பது குறித்து இன்று காலை டெல்லி விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, “முழுக்க முழுக்க மக்கள் பிரச்சனை குறித்து தான் நாங்கள் பேசினோம். தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு இருக்கிறது. அதற்குள் பேச்சுவார்த்தை நடத்திவிட்டோம் என பத்திரிகைகளில் செய்தி வெளியிடுகிறார்கள். அதுமாதிரி எதுவும் நடைபெறவில்லை”என்றார்.
தற்போது, டெல்லியில் இருந்து சென்னை வந்துள்ள அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், “எந்த கூட்டணியாவது நிலையாக இருந்ததுண்டா? அரசியல் சூழலுக்கு ஏற்றவாறு கூட்டணியில் மாற்றம் ஏற்படும். மீண்டும் பெரு முறை சொல்கிறேன், தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு பிரச்னைகள் குறித்து உள்துறை அமைச்சரிடம் பேசினேன். தேர்தல் கூட்டணி விஷயத்தில் எந்த கட்சியும் நிலையாக இருந்ததில்லை.
அதிமுகவின் ஒரே நோக்கம் திமுக ஆட்சி அகற்றப்பட வேண்டும், அரசியல் சூழலுக்கு ஏற்றவாறு கூட்டணியை இறுதி செய்வோம். தமிழ்நாட்டில் இருமொழிக் கொள்கையே தொடர வேண்டுமென அமித் ஷாவிடம் வலியுறுத்தினேன். தொகுதி மறுசீரமைப்பில் தமிழ்நாடு பாதிக்கப்படக் கூடாது எனவும் வலியுறுத்தப்பட்டது. கல்வி, 100 நாள் வேலை உள்ளிட்ட பல்வேறு திட்டங்களுக்கு தமிழ்நாட்டிற்கு நிதி வழங்கவும் கோரிக்கை வைத்துள்ளேன். தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு குறித்து உள்துறை அமைச்சர் அமித்ஷா விரிவாக கேட்டுக்கொண்டார்” என்று தெரிவித்தார்.
இருப்பினும், இந்த சந்திப்பு தமிழக அரசியலில் பல்வேறு விவாதங்களை கிளப்பியுள்ள நிலையில், அதிமுகவின் அடுத்தகட்ட நகர்வுகள் குறித்து அரசியல் பார்வையாளர்கள் உன்னிப்பாக கவனித்து வருகின்றனர்.