2026-இல் விஜயுடன் கூட்டணியா.? இபிஎஸ் பதில்.!
தேர்தலுக்கு இன்னும் ஒன்றரை வருடங்கள் இருக்கிறது , தவெகவுடன் கூட்டணி குறித்து இப்போது பதில் கூற முடியாது என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
சென்னை : அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று சென்னையில் செய்தியாளர் சந்திப்பில் பொதுமக்களுக்கு தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்தார். பொதுமக்கள் பாதுகாப்பாக தீபாவளி கொண்டாட வேண்டும் என்றும், தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு தீபாவளி போனஸ் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், பகுதி நேர ஆசிரியர்களுக்கு ஊதியத்தை முன்கூட்டியே வழங்க வேண்டும் என்றும் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தார்.
அதனை தொடர்ந்து தவெக தலைவர் விஜய் நடத்திய மாநாடு குறித்தும், அம்மாநாட்டில் விஜய் பேசிய கருத்துக்கள் பற்றியும் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் கூறிய எடப்பாடி பழனிச்சாமி, ” தமிழ்நாட்டில் ஒவ்வொரு கட்சியும் மாநாடு நடத்துவது வழக்கமான ஒன்று தான். அந்த வகையில், தமிழக வெற்றிக் கழகம் சார்பில் மாநாடு சகோதரர் விஜய் தலைமையில் விக்கிரவாண்டியில் மாநாடு நடைபெற்றது. அவருடைய ரசிகர்கள் அவருக்கு துணையாக வந்து கலந்து கொண்டனர்.
ஒவ்வொரு கட்சிக்கும் ஒவ்வொரு கொள்கை உண்டு. இப்போது தான் அவர்கள் கட்சி ஆரம்பித்து முதல் மாநாடு நடத்தியுள்ளனர். இன்னும் 2026 சட்டமன்ற தேர்தலுக்கு ஒன்றரை வருடங்கள் இருக்கிறது. அதற்குள் கூட்டணி பற்றி கூற முடியாது. தவெகவுடன் கூட்டணி என்பது தேர்தல் சமயம் தான் முடிவு செய்யப்படும். அவர் அதிமுக பற்றி விமர்சிக்கவில்லை என்றால் அதிமுக சிறப்பாக செயல்பட்டுள்ளது என்று அர்த்தம்.
ஒவ்வொரு கட்சியும் ஒவ்வொரு கொள்கையை கூறுவர் அது அவரது சுதந்திரம். அதிமுகவுக்கு என்று கொள்கை உள்ளது. கொள்கைஇல்லாத கட்சிகள் என்றால் அது திமுக கூட்டணிகள் தான். கொள்கை ரீதியில் கூட்டணி என்றால் எதற்காக தனித்தனி கட்சிக்கள்.? மொத்தமாக திமுகவுடன் சேர்த்துவிட வேண்டியது தானே. MGR பெயரை சொல்லாமல் இங்கு எந்த கட்சியும் நடத்த முடியாது. ” என்று எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களிடம் பேட்டியளித்தார்.
தவெக முதல் மாநாட்டில், விஜய் பேசுகையில், திமுக கட்சியை நேரடியாகவும், பாஜகவை மறைமுகமாகவும் விமர்சித்து பேசியிருந்தார் . ஆனால் அதிமுக பற்றி அவர் விமர்சனம் செய்யவில்லை. எம்ஜிஆர் பற்றி உயர்வாக கருத்து தெரிவித்து இருந்தார்.