வாய் பந்தல் வேண்டாம்.. நடவடிக்கை எடுங்கள்.! வீடியோ வெளியிட்ட இபிஎஸ்.!

CM MK Stalin Inspected Amma Unavagam in chennai - ADMK Chief secretary Edappadi palanisamy

சென்னை: அம்மா உணவகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்தது குறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி விமர்சன அறிக்கைகையும், ஓர் வீடீயோவையும் வெளியிட்டுள்ளார்.

நேற்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அம்மா உணவகத்தை நேரில் சென்று ஆய்வு செய்தார். அங்குள்ள உணவுகளை சுவைத்தும், அங்கு சாப்பிட வந்தவர்களிடம் உணவின் தரம் பற்றி விசாரித்தும் ஆய்வு செய்தார். பின்னர் அங்குள்ள பொருட்களின் இருப்பு பற்றியும் கேட்டறிந்தார். பின்னர் சென்னை மாநகராட்சியில் செயல்பட்டு வரும் அம்மா உணவகங்களை மேம்படுத்த 21 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து உத்தரவிட்டார்.

இந்நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, முதல்வரின் ஆய்வு மற்றும் நிதி ஒதுக்கீடு குறித்து தனது விமர்சனத்தை முன்வைத்துள்ளார். மேலும், 2021 திமுக ஆட்சி பொறுப்பேற்றதும் சிலர் அம்மா உணவகத்தை அடித்து நொறுக்கும் வீடீயோவையும் தனது எக்ஸ் சமூக வலைதளத்தில் பதிவிட்டு அம்மா உணவகம் எண்ணிக்கை குறைந்துவிட்டது என விமர்சனம் செய்தார்.

இதுகுறித்து தனது எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் குறிப்பிடுகையில், 2021-ல் ஆட்சிமாற்றத்திற்குப் பிறகு அம்மா உணவகங்களை திமுக நிர்வாகிகள் கடப்பாரை போன்ற ஆயுதங்களால் இடித்துத் தள்ளினர். அம்மா உணவகங்களில் பணிபுரிந்தவர்கள் மூன்றில் ஒரு பங்காக குறைக்கப்பட்டனர். அம்மா உணவகங்களை நடத்துவதற்குத் தேவையான நிதியை ஒதுக்காமல், தேவையான அரிசி, காய்கறிகள், பருப்பு வகைகள், எண்ணெய் போன்ற உணவுப் பொருட்களை தரமாக வழங்காமல் இருந்தது திமுக அரசு.

இதனை கடுமையாக எதிர்த்தேன். அதனையடுத்து, அம்மா உணவகங்களை மூடும் முயற்சியை தற்காலிகமாக நிறுத்தியது திமுக அரசு. உண்மை நிலை இவ்வாறு இருக்க, முதலமைச்சர் 19.7.2024 அன்று,  தேனாம்பேட்டை பகுதியில் உள்ள அம்மா உணவகம் ஒன்றில் ஆய்வு மேற்கொண்டு, மக்களிடம் உணவின் தரம் குறித்தும், அங்குள்ள பணியாளர்களிடம் அவர்களின் தேவைகள் குறித்தும் கேட்டறிந்ததாக குறிப்பிட்டார்.

இதே போல் கடந்த மூன்றாண்டுகளில் எத்தனைமுறை உணவின் தரத்தை அதிகாரிகளோ, திமுக அமைச்சர்களோ சோதித்தனர் என்று முதலமைச்சர் விளக்குவாரா? ஆய்வு செய்வதாக ஒரு நாடகத்தை 19.7.2024 அன்று திமுக அரசின் முதலமைச்சர் அரங்கேற்றியுள்ளார். அதிமுக ஆட்சியில் சென்னையில் மட்டும் 407 அம்மா உணவகங்கள் செயல்பட்டு வந்த நிலையில் மூன்றாண்டுகளில் அதை உயர்த்தாமல், சுமார் 19 அம்மா உணவகங்களை மூடியுள்ளது இந்த திமுக அரசு.

இனியாவது வாய் பந்தல் போடாமல், உண்மையிலேயே ஏழை, எளிய, நடுத்தர மக்கள் மற்றும் உழைப்பாளிகளுக்கு சுவையுள்ள உணவு வகைகளை வழங்கவும், மூடியுள்ள உணவகங்களை திறப்பதுடன், மேலும் புதிய அம்மா உணவகங்களை, அதிமுக ஆட்சியின்போது செயல்பட்டதை போல் முழுமையான பணியாட்களுடன், தரத்துடன் இயங்க முதலமைச்சரை வலியுறுத்துகிறேன் என அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். அறிக்கையுடன் அம்மா உணவகத்தை ஒரு கும்பல் சிதைக்கும் வீடீயோவையும் இபிஎஸ் வெளியிட்டுள்ளர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்