சேலத்தில் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை!
சேலத்தில் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருடன், துணை ஒருங்கிணைப்பாளர் சந்திப்பு.
ஜூன் 23-ஆம் தேதி அதிமுக பொதுக்குழு, செயற்குழு நடைபெற உள்ள நிலையில், கடந்த மூன்று நாட்களாக அதிமுகவின் ஒற்றை தலைமை குறித்து தான் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இன்று காலை சென்னையில் அதிமுக தலைமை அலுவலகத்தில் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், அவருடைய ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தியிருந்தார்.
இந்த நிலையில், சேலம் நெடுஞ்சாலை நகர் வீட்டில் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியை, துணை ஒருங்கிணைப்பாளர் கேபி முனுசாமி சந்தித்து ஆலோசனை நடத்தி வருகின்றனர். சேலம் புறநகர் மாவட்ட செயலாளர் இளங்கோவன், முன்னாள் சபாநாயகர் தம்பிதுரை உள்ளிட்டோரும் இபிஎஸ் நடத்தி வரும் ஆலோசனையில் பங்கேற்றுள்ளனர்.
சென்னையில் இன்று காலை ஓபிஎஸ், மூத்த நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்திய நிலையில், தற்போது இபிஎஸ் ஆலோசனை நடத்தி வருகிறார். அதிமுகவில் ஒற்றை தலைமை குறித்த விவாதங்கள் விஸ்வரூபமாக எழுந்த நிலையில், இருவரும் தனித்தனியே, அவர்களது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.