கடந்த 24 மணிநேரத்தில்.. தமிழகத்தில் கொலைகள்.! லிஸ்ட் போட்ட இபிஎஸ்.!
சென்னை: கடந்த 24 மணிநேரத்தில் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் நிகழ்ந்த குற்ற சம்பவங்களை பட்டியலிட்டு திமுக அரசினை எடப்பாடி பழனிச்சாமி கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் பல்வேறு இடங்களில் கொலை மற்றும் கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு குற்ற சம்பவங்கள் நிகழ்ந்துள்ளது என குறிப்பிட்டு ஒரு சில சம்பவங்களை பட்டியலிட்டுள்ளார். அதில் ஆளும் திமுக அரசை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார் இபிஎஸ்.
முதலாவதாக புதுக்கோட்டையில் மர்மநபர்களால் இளைஞர் ஒருவர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளதாகவும், அடுத்து, தஞ்சாவூர் மங்களபுரம் பகுதியில் 21 வயது இளைஞர் வெட்டிப்படுகொலை செய்யப்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
தேனியில் குண்டர் சட்டத்தில் சிறைசென்று வந்தவரை ஆயுதங்களுடன் ஒரு கும்பல் கொலை செய்ய முயற்சி செய்துள்ளது என்றும் குறிப்பிட்டு, இனி இந்த திமுக அரசின் முதல்வரிடம் சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்க வலியுறுத்தி எந்த பயனும் இல்லை என கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
மேலும், எனவே, மக்கள் பணியில் தான் நீங்களும் (காவல்துறையினர்) உள்ளீர்கள் என்ற அர்ப்பணிப்போடு தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கைக் காக்க காவல்துறை அதிகாரிகளைக் கேட்டுக்கொள்கிறேன். திமுக ஆட்சியில் தமிழ்நாட்டில் யாருக்கும் பாதுகாப்பு இல்லை என்று உறுதியாகிவிட்டது. மக்களே, நமக்கு நாமே பாதுகாப்பு என்று விமர்சனம் செய்து தனது எக்ஸ் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி.
கடந்த வாரம் பகுஜன் சமாஜ்வாடி கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை சம்பவம் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பற்றிய பல்வேறு விமர்சனங்களை எழுப்பியுள்ளது. இந்த சம்பவத்தை அடுத்து சென்னை மாநகர காவல் ஆணையர் நேற்று தமிழக அரசால் மாற்றம் செய்ப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சிலர் சரணடைந்தாலும் அவர்கள் உண்மை குற்றவாளிகள் இல்லை என்றும், உண்மை குற்றவாளிகளை கண்டறிய வேண்டும் என்றும் பல்வேறு அரசியல் தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.