யாருடன் வேண்டுமானாலும் கூட்டணி வைப்போம்.. அது எங்கள் இஷ்டம்! எடப்பாடி பழனிசாமி பேச்சு!
பாஜகவுடன் கூட்டணி மட்டும் தான் எனவும் கூட்டணி ஆட்சி கிடையாது எனவும் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

சென்னை : மத்திய அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான அமித்ஷா கடந்த வாரம் தமிழகம் வந்திருந்த போது, தமிழக அரசியலில் முக்கிய நிகழ்வாக 2026 சட்டமன்ற தேர்தலுக்காக தமிழகத்தில் அதிமுக தலைமையில் பாஜக கூட்டணி என அறிவித்தது அரசியல் வட்டாரத்தில் ஹாட் டாப்பிக்கான விஷயமாக மாறியுள்ளது.
எனவே, தமிழகத்தில் அதிமுக – பாஜக கூட்டணி அமைத்ததை அடுத்து திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சியினர் கடுமையாக விமர்சனம் செய்து பேசி வருகிறார்கள். இந்த நிலையில், அதிமுக – பாஜக கூட்டணி குறித்து விமர்சனங்கள் எழுந்துகொண்டிருக்கும் சூழலில், சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அந்த விமர்சனங்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பேசியிருக்கிறார்.
இது குறித்து பேசிய அவர் ” இது எங்களுடைய கட்சி நாங்கள் யாருடன் வேண்டுமானாலும் கூட்டணி வைப்போம். எங்களுடைய கூட்டணி பார்த்து எதற்கு எரிச்சல் படுறீங்க? என்னைப்பொறுத்தவரை கூட்டணி பார்த்து பயம் வந்துவிட்டது. இன்றைக்கு அதிமுக என்றால் ஒரு பிரதான கட்சி தமிழகத்தில் 30 ஆண்டுகாலமாக ஆட்சிபுரிந்த கட்சி பொன்விழா கண்ட கட்சி. எனவே, எங்களுடைய கட்சி ஆட்சிக்கு வரவேண்டும். அந்த எண்ணத்தில் அடிப்படையில் மட்டும் தான் நாங்கள் கூட்டணி அமைத்துக்கொண்டு இருக்கிறோம்.
எனவே, எங்களுடைய கட்சியை நாங்கள் எந்த கட்சியோடு வேண்டுமானாலும் கூட்டணி வைப்போம் அதில் உங்களுக்கு என்ன பிரச்சினை? கூட்டணி வைப்பது எங்களுடைய இஷ்டம். இவோரோடு கூட்டணி வைத்தால் வரமாட்டோம் அவரோடு கூட்டணி வைத்தால் வரமாட்டோம் என்று நீங்கள் சொல்ல தகுதி இல்லை இதெல்லாம் வக்காலப்பெருமக்கள் முடிவு செய்வார்கள்” எனவும் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
அதனை தொடர்ந்து பேசிய எடப்பாடி பழனிசாமி ” அதிமுக – பாஜக கூட்டணி அமைக்கும் என்று தான் அமித்ஷா சொன்னாரு. கூட்டணி அரசு என்று அவர் எங்கும் சொல்லவில்லை. எனவே, நீங்களாக ஏதாவது கிளப்பி விடாதீர்கள். விறு விறுப்பான செய்திகள் வேண்டும் என்று இப்படி செய்யாதீர்கள். டெல்லிக்கு பிரதமர் மோடி என்றால் தமிழ்நாட்டுக்கு நான் என்று என்னுடைய பெயரை சொல்லி சொன்னாரு. இதில் இருந்த நீங்கள் புரிந்துகொள்ளலாம். எனவே, இதில் இருந்து அதாவது விஞ்ஞான மூளையை பயன்படுத்தி எடுக்கலாம் என்று பார்க்காதீர்கள்” எனவும் எடப்பாடி பழனிசாமி பேசிவிட்டு சென்றார்.