வெயில் ரொம்ப ஓவர்! தமிழ்நாட்டில் பள்ளிகளுக்கு முன்கூட்டியே கோடை விடுமுறை அறிவிப்பு!
கோடை வெயில் தாக்கம் காரணமாக 1 முதல் 5ம் வகுப்பு ஆண்டு இறுதித்தேர்வுகளை முன்கூட்டியே மாற்றி அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை : கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால், தமிழ்நாட்டில் 1 முதல் 5ம் வகுப்பு வரையிலான ஆரம்பப் பள்ளி மாணவர்களுக்கான ஆண்டு இறுதித் தேர்வுகளை முன்கூட்டியே நடத்துவதற்கு பள்ளிக் கல்வித்துறை முடிவு செய்திருந்ததாக ஏற்கனவே பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்திருந்தார். இது குறித்து பேச்சுவார்த்தை நடத்தியபிறகு விவரங்கள் அறிவிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்திருந்தார்.
அதனைத்தொடர்ந்து தற்போது வரும் ஏப்ரல் 17ம் தேதிக்குள் முடிக்கப்பட்டு, அதைத் தொடர்ந்து கோடை விடுமுறை அறிவிக்கப்பட உள்ளது. கோடை வெயில் தாக்கம் காரணமாக 1 முதல் 5ம் வகுப்பு ஆண்டு இறுதித்தேர்வுகளை முன்கூட்டியே நடத்தப்போடும் என அதற்கான தேதிகள் குறித்த விவரமும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து பள்ளி கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் ” தொடக்கக் கல்வி இயக்கக நிர்வாகத்தின் கீழ் செயல்படும் பள்ளிகளில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு 09.04.2025 முதல் 21.04.2025 வரை மூன்றாம் பருவத் தேர்வு ஆண்டு இறுதி தேர்வு நடைபெறும் அறிவிக்கப்பட்டு இருந்தது.
தமிழ்நாட்டில் வெயிலின் தாக்கம் தற்போது தீவிரமாக இருப்பதால் பல்வேறு தரப்பினரின் கோரிக்கைகள் மற்றும் பெற்றார்களின் வேண்டுகோளை ஏற்று மாண்புமித தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவின் படியும் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் வழிகாட்டுதல்களின் படியும் தேர்வுகள் முன்கூட்டியே தொடங்க திட்டமிடப்பட்டு உள்ளது. அதன்படி, வருகின்ற 07.04.2025 முதல் 17.04.2025 வரை தேர்வுகள் நடைபெறும் என தொடக்கக் கல்வி இயக்குநரகம் தெரிவித்துள்ளது. எனவே, இந்த அறிவிப்பின் காரணமாக வரும் ஏப்ரல் 7ம் தேதி தொடங்கி 17ம் தேதிக்குள் தேர்வுகள் முடிக்கப்பட்டு, 18-ஆம் தேதி முதல் கோடை விடுமுறை விடப்பட உள்ளது.