புதுச்சேரியில் ரத்து செய்யப்பட்ட இ-பாஸ் நடைமுறை!
புதுச்சேரியில் இ பாஸ் முறை ரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து வெளி மாநிலத்தவர்கள் உள்ளே வர தடை இல்லை என புதுவை அரசு தெரிவித்துள்ளது.
கடந்த சில மாதங்களாக கொரோனா வைரஸின் தாக்கம் தமிழகத்திலும் அதிக அளவில் பரவி வரக் கூடிய சூழ்நிலையில் தமிழகத்தில் சில தளர்வுகளுடன் ஊரடங்கு அமல் படுத்தப்பட்ட நிலையிலேயே உள்ளது. இருப்பினும், வெளி மாவட்டங்களுக்கு செல்ல இ பாஸ் முறையில் அனுமதி வாங்கி தான் செல்ல முடியும். இந்நிலையில், இ பாஸ் நடைமுறையை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும் என்று மாநிலங்களை வலியுறுத்தியிருந்தது. இருப்பினும் தமிழகத்தில் இன்னும் ரத்து செய்யப்படவில்லை. இதைத் தொடர்ந்து கடந்த 23ஆம் தேதி முதல் புதுச்சேரியில் இ பாஸ் ரத்து செய்யப்பட்டது.
அதற்கான உத்தரவையும் இணையதளத்தின் முகப்பிலேயே மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் இன்னும் இ பாஸ் முறை நடைமுறையில் உள்ளதால் புதுவையில் உள்ளவர்கள் இ பாஸ் ரத்து செய்யப் பட்டிருந்தாலும், வெளிமாநிலங்களுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. எனவே புதுச்சேரி முதல் அமைச்சர் நாராயணசாமி அவர்கள் கூறுகையில், மத்திய அரசின் அறிவுறுத்தலின்படி புதுச்சேரியில் இ பாஸ் நடைமுறை ரத்து செய்யப்பட்டுள்ளது. எனவே வெளிமாநிலத்தவர் எல்லையில் உடல் வெப்ப பரிசோதனை மேற்கொண்டு புதுச்சேரிக்குள் வரலாம். அது போல புதுச்சேரியில் உள்ளவர்கள் வெளிமாநிலங்களுக்கு செல்ல விரும்பினால் சம்பந்தப்பட்ட மாநிலங்களிடம் இ பாஸ் விண்ணப்பித்து அதன்பிறகு செல்லலாம் என கூறியுள்ளார்.