“இனி ஊட்டிக்கு வருபவர்களுக்கு இ-பாஸ் கட்டாயம்”- ஆட்சியர் அதிரடி உத்தரவு!
தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், ஊட்டிக்கு சுற்றுலா வரும் வெளிமாநிலத்தவருக்கு இ-பாஸ் கட்டாயம் என்று மாவட்ட ஆட்சியர் இன்னசன்ட் திவ்யா உத்தரவிட்டுள்ளார்.
தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்துக்கொண்டே வரும் நிலையில், தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அந்தவகையில், கொரோனா பரவல் குறித்து நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசன்ட் திவ்யா அதிகாரிகளுடன் ஊட்டியில் ஆலோசனை நடத்தினார். அதன்பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், கொரோனா பரவலை தடுக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறினார்.
மேலும், இந்தியாவில் உள்ள பிற மாநிலங்களில் இருந்து ஊட்டிக்கு வரும் அனைவருக்கும் இ-பாஸ் கட்டாயம் என்றும், இ-பாஸ் எடுத்து வருபவர்கள் கட்டாயம் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்தார். அதுமட்டுமின்றி ஊட்டி தாவரவியல் பூங்கா உள்ளிட்ட சுற்றுலா தலங்களில் அரசு அறிவித்துள்ள கொரோனா வழிகாட்டுதல் நெறிமுறைகள் பின்பற்றப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.