“நான் துணை முதலமைச்சரா.?” பதறிப்போன செல்வப்பெருந்தகை! 15 நாட்கள் கெடு உத்தரவு!
தனக்கு ஒட்டிய பிறந்தநாள் போஸ்டரில் துணை முதல்வர் என குறிப்பிட்டதற்கு கண்டனம் தெரிவித்து கட்சி நிர்வாகியிடம் செல்வப்பெருந்தகை விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

சென்னை : 2026 சட்டமன்ற தேர்தலில் கூட்டணி ஆட்சி தான். ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு போன்ற கோரிக்கைகள் தமிழக அரசியல் வட்டாரத்தில் தற்போது அதிகரிக்க ஆரம்பித்துள்ளன. ஏற்கனவே விசிக, காங்கிரஸ், பாமக, பாஜக ஆகிய கட்சிகள் இந்த முழக்கத்தை முன்வைத்து வருகின்றனர்.
இதில் ஒருபடி மேலே சென்று, காங்கிரஸ் மாநிலச் செயலாளர் ஷெரிப், காங்கிரஸ் மாநிலத் தலைவர் செல்வப்பேருந்தைக்கு ஒட்டிய பிறந்தநாள் வாழ்த்து போஸ்டரில் ‘ 2026 துணை முதலமைச்சர்’ என பதிவிட்டு பதற்றத்தை கிளப்பியுள்ளார். அந்த போஸ்டரில், ” ‘ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு’ ஏப்ரல் 14-ல் பிறந்தநாள் காணும் 2026-ன் துணை முதல்வரே ” என பதிவிட்டுள்ளனர்.
இதற்கு அதிருப்தி தெரிவித்துள்ள காங். மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை, ஒற்றுமையாக இருக்கும் திமுக – காங்கிரஸ் கூட்டணியில் குழப்பம் விளைவிக்கும் நோக்கில் இந்த போஸ்டரில் வாசகங்கள் இடம்பெற்றுள்ளன. இதனை நான் வன்மையாக கண்டிக்கிறேன். இந்த போஸ்டர் ஒட்டியது தொடர்பாக மாநிலச் செயலாளர் ஷெரிப் அடுத்த 15 நாட்களுக்குள் நேரில் வந்து விளக்கம் அளிக்க வேண்டும். நீங்கள் தரும் விளக்கம் தேசிய தலைமைக்கு அனுப்பி வைக்கப்பட்டு ஒழுங்கு நடவடிக்கைக்கு உட்படுத்தப்படும் என தெரிவித்துள்ளார்.