திமுக பொருளாளராக துரைமுருகன் நீடிப்பார் – மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
திமுக பொருளாளராக துரைமுருகன் நீடிப்பார் என அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
திமுக பொதுச் செயலாளர் க.அன்பழகன் மறைவால், அந்த பொறுப்பு தற்போது காலியாக உள்ளது. இதனால் பொதுச் செயலாளர் பொறுப்புக்குப் போட்டியிட உள்ளதால், பொருளாளர் பொறுப்பிலிருந்து விலகுவதாக, துரைமுருகன் தன்னிடம் கடிதம் அளித்ததாகவும், அவரின் விலகலை ஏற்றுக்கொள்வதாகவும் கடந்த மார்ச் மாதம் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருந்தார்.
இதையயடுத்து மார்ச் 29-ம் தேதி திமுக பொதுச் செயலாளர், பொருளாளர் பதவிக்கான தேர்வு நடைபெறுவதற்காக அக்கட்சியின் பொதுக்குழு கூடும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், அதற்குள் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, திமுக பொதுக்குழுக் கூட்டம் மறுதேதி அறிவிப்பின்றி ஒத்தி வைக்கப்பட்டது. இந்த நிலையில் முக ஸ்டாலின் தற்போது வெளியிட்டுள்ள அறிவிப்பில், கொடிய நோயான கொரோனா இருக்கும் சமயத்தில், திமுக சட்ட விதி: 17-ஐ பயன்படுத்தி, பொதுக்குழுவை கூட்டி, பொதுச் செயலாளர், பொருளாளர் பதவிகளுக்கு தேர்வு செய்ய முடியாத சூழ்நிலை உள்ளது.
இதனை கருத்தில் கொண்டு அப்பொதுக்குழு கூடும் வரையில், திமுக சட்ட விதி: 18-ன் கீழ் எனக்கு அளிக்கப்பட்டிருக்கும் அதிகாரத்தின்படி, துரைமுருகன் கொடுத்த ராஜினாமா கடிதத்தின் பெயரில் நான் எடுத்த நடவடிக்கையை தற்காலிகமாக நிறுத்தி வைத்து. அவரே பொருளாளர் பதவியில் தொடர்ந்து நீடிப்பார் என அறிவிக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.